2021 ஜூன் 16, புதன்கிழமை

நல்லிணகப் பொறிமுறைச் செயலணியில் பதிவு செய்யுங்கள்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் நல்லிணக்கப் பொறிமுறைக்கான வலயச் செயலணியில் பதிவு செய்து, நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு, அக்கைதிகளின் உறவினர்களிடம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில், அச்சமூகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லிணக்கப் பொறிமுறை உருவாக்கம் பற்றி, பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வலய ரீதியில் கருத்தறியும் செயலணியின் செயற்பாடுகள், நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், போரின்பால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதிலிருந்து எவ்வாறு மீள முடியும் என்று அவர்களிடமே கருத்துக்களைக் கேட்டறிந்து  அறிக்கையிடுவதே அச்செயலணியின் செயற்பாடாகும்.

எனவே, நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அச்செயலணி அமர்வுகளில் பங்குபற்றி, விவரங்களைப் பதிவுசெய்து, தமது நேசத்துக்குரியவர்களின் விடுதலையின் அவசியத்தை தெரிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

மக்கள் கருத்தறியும் குழுவினர், வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும், நாடளாவிய ரீதியாகவும் பதினைந்து கிளைக் காரியாலயங்களை நிறுவி, தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில், மேல் மாகாணத்துக்கான பிரதான அலுவலகம், இலக்கம் 24ஃ13, விஜயபா மாவத்தை, நாவல வீதி, நுகேகொட எனும் முகவரியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலயச்செயலணியின் செயற்பாட்டு அமர்வுகள், ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளமையால், குறித்த அமர்வுகளில் பதிவுசெய்யத் தவறியவர்கள், அந்தந்த மாவட்டங்களில், குறித்த குழுவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இணைப்பாளர்களுடன், பிரதேச செயலகங்கள் ஊடாக தொடர்புகொண்டு தமது கருத்துக்களை எழுத்துமூலம் பதிவுசெய்ய முடியும்.

எவ்வாறாயினும், நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்தறியும்  குழுவின் செயற்பாடுகள், ஓகஸ்ட்  மாத  இறுதிக்குள் முழுமைப்படுத்த இருப்பதனால், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், பெற்றோர்கள், காலக்கிரமத்தில் கருத்துக்களை பதிவு செய்வது அவசியமாகும்.

கருத்தியல் அடிப்படையிலான சிக்கல்களைக் களைவதன் மூலமே, நல்லிணக்கத்தை  ஏற்படுத்த முடியும். அதற்கமைய, இன முரண்பாட்டின்  இறுதி வடிவத்தின் எச்சங்களாக, நீண்டகாலம்  சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை என்பது, இனங்களுக்கிடையிலான  நல்லிணக்கத்துக்கு அவசியமான ஒன்றாகவே நோக்கப்படுகிறது.

ஆகையினால், கைதிகளின் உறவினர்கள், தமது உறவுகளின் விடுதலையை எந்த முறையில், எதன் ஊடாகப் பெறமுடியும் என்பதனையும் அதன் நியாயத்தன்மையையும் அச்சமின்றி பதிவுசெய்ய முடியும் .

எனவே, இச்சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .