2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

காணி மோசடி செய்ய முற்பட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கைதடியில் உள்ள  வடமாகாணசபை அலுவலகக் கட்டிடத்திற்கு முன்பாக உள்ள காணியை தனது காணி எனக் கூறி, விற்பனை செய்வதற்கு  முற்பட்ட ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவருக்கு உதவியதாகக் கூறப்படும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

கொழும்பிலிருந்து  வந்ததாகக் கூறப்படும்  மேற்படி சந்தேக நபர்,  வடமாகாணசபை அலுவலகத்துக்கு முன்பாக உள்ள காணியை  தன்னுடையது என்றும் இந்தக் காணியை  தான் குறைந்த விலையில் காணி இல்லாதவர்களுக்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் அதற்காக 15 ஆயிரம் ரூபா செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளும்படியும் கூறியுள்ளார்.

பதிவுகளை மேற்கொண்ட பின்னர் குடிசைகள் போட்டு குடியேறுங்கள். பணத்தினை முழுமையாகச் செலுத்திய பின் உங்களுக்கான உறுதிகளை வழங்குவோம் எனவும் சந்தேக நபர்  தெரிவித்துள்ளார்.

இதற்கு நாவற்குழியைச் சேர்ந்த  பெண் ஒருவரும் உதவி புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இதனை நம்பிய நாவற்குழி, கைதடி பகுதிகளினைச் சேர்ந்த  92 பேர் கடந்த வியாழக்கிழமை சந்தேக நபரிடம் பணம் செலுத்தியுள்ளனர்.

இவ்வாறு பணம் செலுத்திய 92 பேரையும் பதிவுகளை மேற்கொள்வதற்காக நேற்று சனிக்கிழமை வருகை தந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு  கூறி சந்தேக நபர் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், காணி மோசடி இடம்பெறுவதாக கேள்விப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்விடத்திற்கு வந்துடன்,  அந்த நபரிடமும் இது தொடர்பில் வினவியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டது.

அவ்விடத்திற்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் மேற்படி சந்தேக நபரையும் இவருக்கு உதவியதாகக் கூறப்படும் பெண்ணையும் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .