2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண மரநடுகை மாதத்தில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மரநடுகை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வட மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத் தரும் மாதம் கார்த்திகை. அதனாலேயே, ஷகார் என்ற மழையைச் சுட்டுகின்ற பெயரை இம்மாதத்தின் பெயராகச் சூட்டியுள்ளோம். மழை நீரால் மாத்திரம் அல்ல, தமிழ் மக்களின் கண்ணீரால் நனையும் மாதமாகவும் கார்த்திகை உள்ளது.

மரங்களே எமது ஆதித் தெய்வங்கள். மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டு முறையைக்கொண்ட  நாம் மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நட்டுப் போற்றும் மாண்பையும் கொண்டிருக்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயே கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்பதை மகுட வாசகமாகக் கொண்ட மரநடுகை மாதத்தின் நடப்பு ஆண்டுக்குரிய கருப்பொருள் சொந்த மண் சொந்த மரங்கள் என்பதாகும். எமது சொந்த மண்ணில் எம்மோடு சேர்ந்தே பரிணாமித்து வளர்ந்த சொந்த மரங்கள் ஏராளம் உண்டு. எமது மண்ணின் செழுமையை  இற்றை வரை தக்க வைத்திருப்பவை இந்த உள்ளூர் மரங்கள்தான்.

அந்த வகையில், உயிர்ச்செழிப்பின் உயிர் நாடியாக விளங்கும் உள்ளூர் மரங்களுக்கு இந்த ஆண்டு மரநடுகை மாதத்தின்போது கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடுகை செய்வதோடு தொடர்ச்சியாகப் பராமரிப்போம் என்ற உறுதிமொழியுடன் எமது சுற்றாடல் அமைச்சை அணுகும் எவருக்கும் எம்மால் இயன்ற அளவுக்கு மரக்கன்றுகளை வழங்குவதற்கு நாம் சித்தமாயுள்ளோம். 

எமது மண்ணின் பசுமைமையும் எமது எதிர்கால தலைமுறையின் வளமான வாழ்வையும் பாதுகாக்கும் இந்தப் புனிதமான கைங்கரியத்தில் பாடசாலைகள், கூட்டுறவு அமைப்புகள், சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள், வணக்கத்தலங்கள் ஆகியவற்றோடு, பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X