2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

‘இரணைதீவு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே இறுதி முடிவை எடுக்க முடியும்’

Editorial   / 2018 மே 14 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“இரணைதீவு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே இறுதி முடிவை எடுக்க முடியும;”என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று (14) காலை இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்குமாறு கோரி கடந்த ஓராண்டாக இரணைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தின் ஓராண்டு நிறைவில் கடந்த 23 ஆம் திகதி வெள்ளை கொடியுடன் இரணைதீவுக்கு படகுகளில் சென்ற மக்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் தலமையிலான குழுவினர் அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளதுடன் உதவிப்பொருட்களையும் வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

“போர் முடிவடைந்த பின்னர் அவ்விடத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறல்லாது வடமாகாணத்தில் பெருமளவான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறே இரணைதீவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக விடுவிக்க முடியாது என கூறியுள்ளனர். ஆனால் இங்கு 3 ஏக்கர் அளவிலான காணியில் மாத்திரமே இராணுவத்தினர் உள்ளனர். மிகுதி காணிகள் வெறுமையாகவே உள்ளன. எனவே அக்காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கலாம். ஆனால் அது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமே உள்ளது. அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அரசியல் ரீதியான முடிவுகளையே எடுப்பார்கள். எம்மிடமுள்ள அதிகாரங்களை கொண்டு இவற்றை விடுவிக்க முடியாது. எனவே நாம் காணி தொடர்பான ஆவணங்களை தயார் செய்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.

அத்துடன் இரணைதீவு விடுவிப்பு தொடர்பாக வடக்கு அமைச்சர் சுவாமிநாதனிடம் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.

மேலும், இங்கு குடியேறியுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். விரைவில் இங்கு நிலவும் குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம்.

மக்கள் தங்கள் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல சர்வதேச சட்டங்களில் உரித்து உண்டு. அதனை நீங்கள் நிறைவேற்றியுள்ளதாக அந்த அனுமதியை வழங்க வேண்டுமென்றே நாங்களும் கோருகின்றோம். ஏனெனில் அவ்வாறு கொடுப்பதாக அரசும் ஜெனிவாவில் உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆகவே நீங்கள் இருக்க வேண்டிய இடத்துக்கு தான் தற்போது வந்துள்ளீர்கள். ஆகவே உங்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

மேலும், இப்பிரச்சினைக்கு விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .