Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 ஜூன் 06 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வடமாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுகளில் இரண்டு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், விசாரணைகள் மூலம் நிரூபணமாகியுள்ளன. மற்றைய இரண்டு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் இல்லாமையால் நிரூபிக்கப்படவில்லை.
வடமாகாண சபையின் அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றசாட்டுகளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் முன் வைத்து வந்த நிலையில் அவற்றை விசாரணை செய்ய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை குழு ஒன்றினை கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் நியமித்தார்.
அக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
குறித்த விசாரணை குழு, தனது பணியை கடந்த நவம்பர் மாதம் ஆரம்பித்தது. அக்குழுவின் விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. அது முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி, முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த கண்டறிவுகள், பரிந்துரைகள் பகுதியில் அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விவசாய அமைச்சரின் மீதான குற்றசாட்டு
விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆளும் கட்சி உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், தன்னுடன் வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசாவுடன் விசாரணைக் குழுவிடம் முன்னிலையாகியிருந்தனர். அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம், தவராசா குறுக்கு விசாரணை செய்திருந்தார். அதிகார வரம்பு மீறல், முறைகேடுகள், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகள் இருக்கின்ற நிலையில், இளையவரான ம.பற்றிக்நிறைஞ்சன் இவரது அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டார். இது இவர் செய்கின்ற மோசடியான நடவடிக்கைகளுக்கு இணங்கிச் செயற்படுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மரம்நடுகை, பாதீனிய ஒழிப்பு, நீர் ஆய்வு விடயங்களை சுற்றாடல் அமைச்சர் என்ற கோதாவில் முன்னெடுத்துள்ளார். சுற்றுச்சூழல் விடயம், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கியைவு நிரலில் உள்ளது. இவற்றை, அரசாங்கத்துடன் சேர்ந்து திணைக்களம் உருவாக்கி மேற்கொண்டிருக்கவேண்டும். அப்படியல்லாமல் அமைச்சரை முன்னிலைப்படுத்தியே இவரது செயற்றிட்டங்கள் அமைந்துள்ளன.
இத்தகைய செயற்றிட்டங்களின் தொடக்க நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் அழைக்கப்பட்டிருக்கின்றார். அவரே இவற்றை இயக்குவதான, பின்னணியில் இருப்பதான மாயை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுள்ளார். அதனை வைத்து தனது கைங்கரியங்களை நிறைவேற்றியுள்ளார்.
இவரது அமைச்சுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விவசாய கிணறு புனரமைப்பு, புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ள.
வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றி திருமதி.வசந்தகுமார் இவரது அழுத்தங்கள் காரணமாகவே மாகாண சபை சேவையை விட்டு வெளியேறினார் என, விசாரணை குழு கண்டறிந்துள்து.
வடமராட்சி கிழக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரை பதவி நீக்கம் செய்தமை உள்ளிட்ட விடயங்களில் அமைச்சர் நேரடியாக தலையீடு செய்து அழுத்தங்களை வழங்கியுள்ளார்.
இதேபோன்று ‘யாழ் கோ’விலும் தலையீடு செய்துள்ளார். இதனால் விசாரணைக்குழு விசனமடைகின்றது. பிந்திய செய்தியாக யாழ்கோ பணிப்பாளர் மற்றும் உறுப்பினர் நியமனங்களிலும் அழுத்தம் கொடுத்துள்ளார் என அறிகிறோம்.
திணைக்கள அதிகாரிகள் மிரட்டப்பட்டு சில நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர் முன்னெடுத்த தன்மை முதன்மைப்படுத்திய செயற்றிட்டங்களால் மாகாண சபை நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் அவரது செயலாளருமான பற்றிக்நிறைஞ்சன் ஆகியோர் பதவி விலக வேண்டும்.
வடக்கு மாகாண சபையை வினைத்திறனாக கொண்டு நடத்துவதற்கு எமது பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கல்வி அமைச்சரின் மீதான குற்றசாட்டு
கல்வியமைச்சர் த.குருகுலராஜா கல்விச்சேவை பின்புலத்திலிருந்து வந்தவர். வடக்கு கல்வி வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் இவர் பொறுப்பேற்றிருந்தாலும், இதன்பின்னரும் கல்விப்புலத்தில் மாற்றம் ஏற்படவில்லை.
கல்வியமைச்சர் த.குருகுலராஜா, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்படியானதோர் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டபோது, தலைமைச் செயலாளரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்துள்ளார். வடமாகாண சபை திறனற்று செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்படுவதை ஆமோதிப்பது போன்று இச்செயற்பாடு உள்ளது.
மிக முக்கியமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை சிறுமி ஒருவர் பாடசாலை அதிபரால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து குரல் எழுப்பிய பாடசாலை ஆசிரியையை, கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளருடன் இணைந்து, கல்வி அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம். எனவே கல்வியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீது குற்றம் சுமத்தியவர்கள் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை. எனினும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாமையால் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கபட்டுள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேவேளை அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், ச.சுகிர்தன், ஆகியோர் ஒரு தடவை கூட முன்னிலையாகவில்லை.
கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவுத்துறை மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரை பதவி விலக வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago