2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் கொலை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு

George   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சுன்னாகம் பொலிஸாரால் கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் என்ற இளைஞன், பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு  தொகுப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒத்திவைத்தார்.

வட, கிழக்கு மாகாணங்களில் வியாழக்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ். மேல் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (28) எடுத்துக்கொள்ளப்படவிருந்த, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் பொலிஸார் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர்.

படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் வீசி விட்டு சுமணன் தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் கூறினர்” என,  படுகொலையானவரின் நண்பர்கள்,  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்தனர்.

அதனையடுத்து, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கடமையாற்றிய 8 பொலிஸார் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

அதில், 5 பொலிஸாருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும், கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதைக் குற்றசாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த வழக்கு தொடர்பில் இடம்பெற்ற சாட்சிப்பதிவுகளின்போது,  சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் நபரை தனக்கு தெரியாது எனவும் தான் அவரை கண்டதே இல்லை எனவும் மூன்றாவது எதிரி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த நபரை பிணையில் விடுவிக்க வேண்டும் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரியதை அடுத்து, குறித்த சந்தேகநபரை 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

சாட்சிப்பதிவுகள் நிறைவுற்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (28) தொகுப்புரை இடம்பெறும் என நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் ஆஜராகவில்லை.

அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த், “வட - கிழக்கு மாகாணங்களில் வியாழக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக போக்குவரத்து  இடம்பெறவில்லை. இதனால் பிரதி சொலிஸ்டரால் மன்றுக்கு சமூகம் தர முடியவில்லை” என, தெரிவித்தார்.

இதனையடுத்து,  நீதிபதி வழக்கு தொடர்பான தொகுப்புரையை எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X