2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

உரிமைகளை வெல்வோம்: டக்ளஸ் அறைகூவல்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 30 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

"எந்தவோர் அரசாங்கமும் சரி,  தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளையோ, அன்றி, உழைக்கும் மக்களின் உரிமைகளையோ எமக்கு தாமாகத் தரப்போவதில்லை. 'அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்' என்பதுபோல், எமது மக்களின் உரிமைகளை நாமே வெல்ல வேண்டும்" என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மே தினம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், "உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள், தமது உரிமைகளுக்காக் குரல் கொடுக்கும் இன்றைய மே தினத்தில், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும், நாம் தன்னலமற்ற பாதையில் தனித்துவமாகத் தொடர்ந்தும் உழைக்க உறுதி கொள்வோம்.

எங்கெல்லாம் உழைக்கும் மக்களின் குரல்கள் எழுந்தனவோ, எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்ற தேச மக்களின் போராட்டங்கள் நடந்தனவோ, அங்கெல்லாம் முடிந்தளவு உரிமைகள் கிடைத்தன.

ஆனாலும், தமிழ் பேசும் தேசிய இனத்தின் உரிமைப்போராட்டமோ, எமது உழைக்கும் மக்களின் உரிமைக்குரல்களோ, இதுவரை நிரந்தரத் தீர்வை எட்டிவிடவில்லை.

வாக்களித்த மக்கள், தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, வீதிக்கு வந்து போராடத் துணிந்திருக்கின்றார்கள். மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு, நாம் மதிப்பளிப்போம்.

உரிமையின் வெற்றிக்கு, மாற்றங்களை உருவாக்க வல்ல மாபெரும் சக்தியாக மக்கள் எழுந்து வர வேண்டும்” என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X