2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’ஊழியர்களின் போராட்டத்துக்குப் பூரண ஆதரவு’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

அமைச்சர் ஹக்கீமின் அரசியல் தலையீட்டுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, யாழ் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்துக்குப் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“யாழ். பல்கலைக்கழத்துக்கு கல்வி சாரா ஊழியர்களை ஆட்சேர்த்துக் கொள்ளும் நடைமுறையை பக்கச் சார்பற்றதாகவும் அரசியல் தலையீடு அற்றவகையிலும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்த்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு தெரிவித்துக் கொள்கின்றது.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும் முறைகேடுகளும் நிலவுவதாகவும் அரசியல் தலையீடு காணப்படுவதாகவும் ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

“உயர்கல்வியமைச்சில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலில் வடக்கு மாகாணத்திலிருந்து விண்ணப்பித்திருந்த 400க்கும் அதிகமான கல்விசாரா ஊழியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
 

“குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒப்பந்த நிறுவனமொன்றின் கீழ் பணியாற்றுகின்ற 53 பேர்களின் பெயர்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற 30க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பெயர்கள், வவுனியா வளாகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டு வடக்கு மாகாணத்துக்கு வெளியேயிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது ஆதரவாளர்களின் பெயர்களை இணைத்து ஆட்சேர்ப்புப் பட்டியலை அனுப்பியுள்ளதாகவும் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“அமைச்சரின் இச்செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இ;ந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவுகின்ற ஆட்சேர்ப்பு நடைமுறையிலுள்ள பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முறைகேடுகள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06) பல்கலைக்கழக நுழைவாயிலை இடைமறித்துக் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

“எனினும், அவர்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், ரவூப் ஹக்கீம் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் முன்னதாக அனுப்பியிருந்த ஆட்சேர்ப்புப் பட்டியலிலுள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதை விரைவுபடுத்துமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாக ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

“தமிழர்களின் தொழில் வாய்ப்பை திட்டமிட்டு பறிக்கும் நோக்கிலும், இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளை சீர்குலைக்கும் வகையிலும் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரவூப்ஹக்கீம் அவர்களின் செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், அவர் தனது அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .