2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கணவனால் தீ மூட்டப்பட்ட இளம் மனைவி மரணம்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கணவனால் தீ மூட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (08) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான கிரிசாந்தன் கல்பனா (வயது 21) என்பவரே உயிரிழந்தார்.

கடந்த 28ஆம் திகதி இரவு 9 மணியளவில், மதுபோதையில் வந்த மேற்படி பெண்ணின் கணவன், வழமைபோன்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டின் வெளிக்கதவினைப் பூட்டிவிட்டு, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை அயல் வீட்டுக்காரர்கள் அவதானித்த போது, தீயினை அணைப்பது போல் பாசாங்கு செய்துள்ளார்.

அயல் வீட்டுக்காரர்களினால் உடனடியாக காப்பாற்றப்பட்ட பெண், முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

தீ மூட்டிய குடும்பஸ்தருக்கு, முல்லைத்தீவில் ஒரு குடும்பம் ஒன்று உள்ளதாகவும், அவர் தற்போது அங்கு தலைமறைவாகி வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், தீக்காயங்களுக்குள்ளான பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X