Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 03 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முதலமைச்சராகிய உங்களைப் பதவியிலிருந்து விலக்க முயன்ற நேரத்தில், உங்களை விலக்க முடியாதவாறு எனது கட்சியும் நானும் உங்களுக்கு உறுதுணையாக நின்றோம். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்று, நீதிமன்றத்தில் நிறைவுபெற்ற ஒரு சம்பவத்தை மீண்டும் கிண்டியெடுத்து உங்களையும் என்னையும், எனது கட்சியையும் களங்கப்படுத்தும் ஒரு சதிச்செயலே இதுவென நான் கருதுகின்றேன்” வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில், அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, கடிதமொன்றையும் நேற்று (02) அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதிகளை, ஊடகங்களுக்கும் அவர் அனுப்பிவைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பத்திரிகைகள் சிலவற்றில், இன்றையதினம் (நேற்று ஞாயிற்றுக்கிழமை ) வெளியான செய்தி தொடர்பில், எனது மன உளைச்சலையும், என் கட்சியினதும் மன உளைச்சல்களையும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
தாங்கள் எனக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் பத்திரிகை ஒன்றில் தலைப்புச் செய்தியாக வரும்வகையில் வெளியே கிடைக்கச் செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றதாக்கியுள்ளது.
மாகாணசபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் கோவைகளும் அதற்கான பதில்களும் பகிரங்கமாக்கப்படுவதில் மாகாணசபை தலைமையின் ஆளுமை விவாதத்துக்கு உரியதாகின்றது.
எனக்கு தாங்கள் தந்த பதில் கடிதத்தின் பிரகாரம், சிவராம்(தராக்கி) வழக்கு விடயத்தில் முழுமையான விவரங்களை தாங்கள் பெற்றிருக்கவில்லை என்பது புரிந்துகொள்ளப்படுகின்ற அதேவேளை, இது தொடர்பான தங்களின் என் மீதான சந்தேகமான நிலைப்பாடு எனக்கும், எனது குடும்பத்துக்கும் நான் சார்ந்த கட்சிக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதென்பதைத் தெரியப்படுத்துகின்றேன்.
நீங்கள் அறிந்த சிவராம் ஒரு பத்திரிகையாளர். ஆனால், எம்மைப் பொறுத்தவரையிலும் சிவராம் எமது கட்சியின் முன்னாள் செயலாளர் என்பதுடன், இந்திய -இலங்கை ஒப்பந்த காலத்துக்கு முற்பட்ட ஓர் ஆயுதம் தாங்கிய எமது இயக்கப் போராளி. 2005 இல் கொல்லப்பட்ட அவரது கொலை வழக்கு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்தவொரு விடயம்.
சிவராம் வழக்கில் பொலிஸாரோ, புலனாய்வுப் பிரிவினரோ என்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்த வகையிலும் குற்றம் சாட்டவோ அல்லது விசாரணக்கு உட்படுத்தவோதானுமில்லை. மேலும், அரசியல் ரீதியாகவோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ எவருமே என்னை இது தொடர்பில் எச்சந்தர்ப்பத்திலும் குற்றஞ்சாட்டியதோ அல்லது குறிப்பிட்டதோ கிடையாது. இவ்விடயத்தில் நான் எந்தவிதத்திலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாக அனைவருக்குமே தெரிந்தவிடயம்.
வடக்கு மாகாண சபையில் நான் உறுப்பினராக வந்த காலந்தொட்டே தங்கள் நோக்கங்களையும், திட்டங்களையும் முன்னிறுத்திச் செயற்படும் ஒருவனாகவே இருந்துள்ளேன். வட மாகாண சபையில் நான் முதலமைச்சர் சார்பான அணிக்குரியவனாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றேன்.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாகப் போராடிவரும் நான், மந்திரி சபையில் மாவட்ட மட்டத்தில் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று தங்களிடம் பலமுறை கோரிக்கையை முன்வைத்துள்ளேன். இது எனக்கு அமைச்சுப் பதவியை கோரியதாக அர்த்தப்படாது.
நானோ எனது கட்சியோ எக்காலத்திலும் அமைச்சுப் பதவிக்காக எவரிடமும் கோரிக்கை வைத்தது கிடையாது. அதே நேரத்தில் பல இடங்களில் புதிய அமைச்சரவையின் நியமனங்கள் பற்றி மறைமுகமாகத் தாங்கள் தெரிவித்திருந்த கருத்துகளின்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கத்துவக் கட்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டப் பிரதிநிதித்துவம் எனும் இரண்டு அடிப்படைகளில் இரண்டாவது சந்தர்ப்பத்தில் அமைச்சர் பதவி எமது கட்சிக்குக் கிடைக்கலாம் என்ற கருத்துப் பரவலாகக் காணப்பட்டது. அதில் ஒரு நியாயம் இருப்பதாகவே நானும் கருதுகின்றேன்.
ஆனால், எனது அரசியல் வளர்ச்சியை பொறுக்கமுடியாதவர்களாகவும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி கிடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும் உள்ள என்மீதோ அல்லது என் கட்சிமீதோ அரசியல் குரோதம் கொண்ட சிலரால் தாங்கள் தவறான முடிவுக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ளீர்கள் என்பதே எனது புரிதலாகவுள்ளது.
மேலும், இவ்விடயம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு எனக்கு எந்த ஒரு சந்தர்ப்பமும் வழங்காமல், என் கருத்துகளையோ விளக்கங்களையோ பெறாமல், சந்தேகங்கள் நிறைந்த முடிவுக்கு வந்ததும் அவை பத்திரிகைகளில் வெளிவரும் சூழலை உருவாக்கியதும் மாபெரும் தவறு என்றே நான் கருதுகின்றேன்.
முதலமைச்சராகிய உங்களைப் பதவியிலிருந்து விலக்க முயன்ற நேரத்தில் உங்களை விலக்க முடியாதவாறு எனது கட்சியும் நானும் உங்களுக்கு உறுதுணையாக நின்றோம். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்று, நீதிமன்றத்தில் நிறைவுபெற்ற ஒரு சம்பவத்தை மீண்டும் கிண்டியெடுத்து உங்களையும், என்னையும், எனது கட்சியையும் களங்கப்படுத்தும் ஒரு சதிச்செயலே இதுவென நான் கருதுகின்றேன்.
இவ்விடயத்தில் நீங்களும் தமிழ் மக்களும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற காரணத்துக்காகவே நான் இக்கடிதத்தை எழுதுகின்றேன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago