2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

குடி நீர்ப் பிரச்சினைக்கு மனிதாபிமான அணுகுமுறை தேவை

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட மக்களின் குடி நீர்ப் பிரச்சினையானது ஒரு முடிவுக்கு வராத நிலையில், தொடர்ந்தும் முரண்பாட்டு கருத்துக்களின் முன்வைப்புக்களுடன் இழுபடும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான மனிதாபிமானமற்ற போக்கினை  அனைத்துத் தரப்பினரும் கைவிட்டு, எமது மக்களின் அடிப்படை நலன்கருதி, தங்களது சுயலாப அரசியலை இவ் விடயத்திலும் புகுத்தாமல் மனிதாபிமான ரீதியில் இப் பிரச்சினையை அணுக முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ். மாவட்ட குடி நீர்ப் பிரச்சினையை ஓரளவுக்கேனும் தீர்ப்பதற்கு இரணைமடு திட்டம் சிறந்தது என்பதை நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வருகின்றோம். இதனால் கிளிநொச்சி மாவட்ட விவசாய மக்கள் பாதிப்படைவார்களென சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இது தவறான கருத்தாகும்.

இரணைமடு குளம் முதலில் முழுமையாக புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். அத்துடன் தற்போதைய இக் குளத்தின் உயரத்தை இரண்டு மீற்றர் உயர்த்த வேண்டும். பின்னர், இதிலிருந்து நீரை கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பாவனைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் வழங்கி அம் மாவட்டத்தின் பூநகரி, பளை பகுதி மக்களின் நீருக்கான தேவையையும் முழுமையாகப் பூர்த்தி செய்ததன் பின்னர் எஞ்சிய நீரை யாழ். மாவட்டத்தின் குடி நீர் தேவைக்காக மாத்திரம் கொண்டுவர வேண்டும் என்பதே எமது திட்டமாகும்.

இதனூடாக யாழ். மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் என்பதுடன், யாழ் மாவட்ட நிலத்தடி நீர் மீள் சுத்திகரிப்புக்கும் இது வழிவகுக்கும்.

இரணைமடு குளமானது தனது வரலாற்றில் ஒரேயொரு முறையே வற்றியிருக்கிறது. மற்ற எல்லாக் காலங்களிலும் நீர் வற்றாத நிலையில் காணப்படுவதுடன், மழை காலங்களில் மேலதிக நீர் வீணாகக் கடலுக்கு செல்லும் நிலையே காணப்படுகின்றது.  

இரணைமடு குளத்திலிருந்து குடிநீரை கொண்டு செல்வதே யாழ். மாவட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்பதை நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கடந்த 27ஆம் திகதி கொழும்பு தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டின்போது தெரிவித்திருந்தார்.

இதைவிடுத்து கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் பற்றி பிரஸ்தாபிப்பதானது, வடமராட்சி கிழக்கு பகுதியிலுள்ள சுமார் 5,000 கடற்றொழில் சார்ந்த குடும்பங்களைப் பாதிக்கச் செய்யும் செயற்பாடாகும் என்பதுடன், இத் திட்டம் அதிகூடிய செலவைக் கொண்டதுமாகும். இதனை இத்திட்டம் பற்றி பிரஸ்தாபிப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, யாழ் மாவட்ட மக்களின் மிக அத்தியாவசிய தேவையாக இருக்கும் குடி நீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் மனிதாபிமான முறையில் முன்வர வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X