2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த நீதிபதி மறுப்புத் தெரிவிப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால், சட்டத்தரணி ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ். மேல் நீதிமன்றத்தில்  செய்யப்பட்ட விண்ணப்பத்தை,  நீதிபதி மா. இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.

'அத்துடன் மனுவையும் தள்ளுபடி செய்து, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும்' எனவும் பணித்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிஸாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில் மிரட்டியதாக கூறப்படும், சட்டத்தரணிக்கு எதிராக கடந்த 2 ஆம் திகதி மல்லாகம் நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.  

அந்தப் பிடியாணையை இடைநிறுத்தி வைப்பதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, குற்றச்சாட்டப்பட்ட சட்டத்தரணி, பிறிதொரு சட்டத்தரணி ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டது.  

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இந்த மனு தொடர்பில், நேற்றுத் திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.

இந்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அது தொடர்பாக செய்யப்பட்ட சமர்ப்பணத்தை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு முதலில் பணிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

'நீதிமன்றத்திடம் வருகின்ற வழக்குகள் தொடர்பில், நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கை முறைகளாகவே,  அழைப்பாணைகள், பிடியாணைகள் என்பன பிறப்பிக்கப்படுகின்றன. இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு பணிந்து நடக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். அவ்வாறு அங்கு ஆஜராகும்போது அந்த நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படுகின்ற கட்டளை, சந்தேகநபருக்கு எதிராக இருக்குமேயானால், அது தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுத்தாக்கல் செய்ய முடியும்' என நீதவான் தனது கட்டளையில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X