2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சந்தேகநபரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள்

George   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

“தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது  செய்வதற்கு இளவாலை மற்றும் பலாலி பொலிஸார் வலைவீசி வருகின்றனர்” என, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

“துன்னாலை, வேம்படி பகுதியில் கடந்த 21ஆம் திகதி இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம், அதன் பின்னர் வைத்தியசாலையில் கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற சந்தேகநபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸாரின் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால், இளவாலை மற்றும் பலாலி பொலிஸார்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 21ஆம் திகதி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் சம்பவத்தில் இரண்டு தரப்பிலும் நால்வர் காயங்களுக்கு உள்ளான நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

இதில் இருவர் கைவிலங்குடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சந்தேகநபர்  ஒருவர் கைவிலங்குடன் தப்பிச் சென்றிருந்தார்.

பின்னர் குறித்த சந்தேகநபர், கிராமத் தலைவர் ஊடாக கைவிலங்கின் திறப்பினை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வாங்கி கைவிலங்கை திறந்து தப்பிச் சென்றுள்ளார். அத்துடன், குறித்த கைவிலங்கை கிராமத் தலைவர், பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார்.

இதன் பின்னர், சந்தேக நபர் வாளுடன் நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். அத்துடன்,  திக்கம் மானாண்டி பகுதியில் உள்ள இறைச்சிக்கடைக்குள் சனிக்கிழமை புகுந்து அங்கிருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி பணத்தினை அபகரித்து சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு தகவல் வழங்கியிருந்தனர். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்னவிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து,  சந்தேகநபரை கைது செய்ய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் 30பேர் கொண்ட பொலிஸ்குழு  நேற்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்விசேட அணியில், இளவாலை மற்றும் பலாலி பொலிஸார் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபரின் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், சந்தேக நபர் கைது செய்யப்படும் வரை இவ் பொலிஸ் குழு, நெல்லியடி பகுதியில் தமது ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும்” என, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X