2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிறுமி வன்புணர்வு : எதிரிக்கு 10 ஆண்டுகள் சிறை

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 23 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருவமடையாத சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று (22) தீர்ப்பளித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிளிநொச்சியை சேர்ந்த 12 வயது சிறுமி, கடத்தி செல்லப்பட்டு தேவாலயம் ஒன்றுக்கு பின்னால் வைத்து, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தோன்றி சாட்சியம் அளித்திருந்தார். அத்துடன் எதிரியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தான் மது போதையில் இருந்த சமயமே அச் சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.

எதிரி திருமணம் ஆனவர் எனவும், அவருக்கு குழந்தைகள் உள்ளன எனவும், அதனால் குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிரி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் கருணை விண்ணப்பம் செய்தார்.

அதன்போது, அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்த், குறித்த குற்ற செயலானது பாரதூரமானது, அதற்கு ஆக கூடியது 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும், குறைந்த பட்சம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனையாவது விதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று(22) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கினார்.

நீதிபதி தனது தீர்ப்பில், எதிரியை இந்த மன்று குற்றவாளியாக கண்டுள்ளது. சிறுமியை கடத்தி சென்றமைக்காக 02 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், பாலியல் வன்புணர்வு குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது. இரண்டு சிறைத்தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க முடியும்.

மேலும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படுகின்றது. அதனை கட்டத்தவறின், 06 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 02 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் அதனை வழங்க தவறின் 02 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X