Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவதுக்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் நேற்று (13) உத்தரவிட்டார்.
கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அந்தப் பெண்ணிடமிருந்து மணநீக்கம் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இந்த முறைப்பாட்டை வழங்கினார். அதனடிப்படையில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட பொலிஸார், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.
அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் பொலிஸார் கடந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர். எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் சந்தேகநபர் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிஸார் அறிந்து கொண்டனர். அதனை அடுத்து சந்தேகநபர் வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வானையும் கைப்பற்றினர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி முன்னிலையானார். சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார். அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி மன்றுரைத்தார்.
எனினும் சந்தேகநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. அவர் மீண்டும் நேற்றுமுன்தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் வரும் 18ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார் என்ற சந்தேகநபரின் சட்டத்தரணியால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை பொலிஸார் ஆராய்ந்தனர். அதற்கு அமைய சிறுமியின் தாயாரை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
சிறுமியின் தாயாரை பொலிஸார் கைது செய்து நேற்று (13) யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர். சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சந்தேநபருக்கு சிறுமியின் தாயார் உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டை பொலிஸார் முன்வைத்தனர்.
அந்தப் பெண் சார்பில் சட்டத்தரணி முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தார். எனினும் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான், சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
16 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago