2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

‘சிவசக்தி ஆனந்தனுக்கு, உளவு பார்க்க பங்களா வழங்கப்பட்டது’

Editorial   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்

“இலங்கை அரசாங்கத்துக்கு உளவு பார்ப்பதுக்கு வழங்கப்பட்ட பங்களாவில் கடந்த மாதம் வரையில் தங்கியிருந்த நடேசு சிவசக்தி ஆனந்தன், 2 கோடி இலஞ்சம் வாங்கினோம் என எங்களை பார்த்து கூறுவது வேடிக்கையான ஒன்று. ஆனாலும் அவர் கூறிய அப்பட்டமான பொய்க்காக நீதிமன்றில் வழக்கு தொடர்வதென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 “நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் வகிபாகம்” என்னும் தலைப்பில் நேற்று(31) யாழ்.இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பும் கலந்துரையாடலும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றார்கள் என நடேசு சிவசக்தி ஆனந்தன் கூறும் பொய்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம், நாங்கள் சொல்லும் உண்மைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. மக்களுடைய தேவைகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரியவர்கள் அதனை செய்வதை இலஞ்சம் என புத்தி உள்ள யாராவது கூறுவாரா?

இந்த ஒதுக்கீடு செப்ரெம்பர் மாதத்தில் செய்யப்பட்டது. வரவு செலவு திட்டம் டிசம்பர் மாதம் வந்தது. பின்னர் எப்படி இது இரண்டுக்கும் தொடர்பு இருக்கும்? மேலும் இந்த வரவு செலவு திட்டம் மட்டுமல்லாமல் முன்னரும் வரவு செலவு திட்டத்துக்கு இதே நடேசு சிவசக்தி ஆனந்தனும் இணைந்து வாக்களித்தோம்.

புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பில் வெல்வதுக்கு 3இல் 2 பெரும்பான்மை வேண்டும். அந்த 3இல் 2 பெரும்பான்மை இங்கே இருக்கிறது என்பதை காட்டுவதற்கே வாக்களிக்கிறோம். ஆனால் அரசுக்கு உளவு பார்ப்பதுக்காக அரசு கொடுத்த பங்களாவில் கடந்த மாதம் வரையில் தங்கியிருந்த நடேசு சிவசக்தி ஆனந்தன் நாங்கள் இலஞ்சம் பெற்றதாக சொல்கிறார்.

எனவே இந்த மோசமான மற்றும் அப்பட்டமான பொய்களுக்கு எதிராக நடேசு சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். அதேபோல் ஊடகங்களுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யும் தீர்மானத்தை நாங்கள் எடுக்கலாம். அதற்கான சட்ட நுணுக்கங்களையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .