2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’சி.விக்கு எதிரான நடவடிக்கை தமிழர்களுக்கு செய்யும் துரோகம்’

George   / 2017 ஜூன் 15 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை  வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த நடவடிக்கை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி மறுதலிக்க முடியாது” என, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர்  எஸ்.விஜயகாந், ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து  பதவியைப் பறிக்க முற்பட்ட தமிழரசுக் கட்சி,  ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக் குழு அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்க முற்பட்டவரை  நீக்க எடுத்திருக்கும் அவசர, அநீதி நடவடிக்கை தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

“தமிழ் மக்களுக்கு சுயநல தமிழ் அரசியல்வாதிகள் துரோகம் செய்வது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அப்போதெல்லாம் அமைதி காத்த தமிழ் மக்கள், இனியும் அமைதி காப்பார்கள் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது.

“எனவே, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு இலட்சத்து 32 ஆயிரம்  வாக்குகளைப் பெற்று, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு மக்களால் கொண்டுவரப்பட்டவரை, எதேச்சதிகாரமாக தூக்கியெறிய முற்பட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

“அநீதிக்கு எதிராக போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும் முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி, என்றும் உறுதுணையாக இருக்கும்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X