2025 மே 17, சனிக்கிழமை

சுகாதாரத் தொண்டர்களால் ஆளுநர் அலுவலகம் முற்றுகை

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

 

சுகாதார தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்து வழங்குமாறு  கோரி, பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்களால், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (04) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டக்காரர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நுழைவாயிலை மூடி தமது எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுகாதார தொண்டர்களுக்கான நியமனங்கள் ஓரிரு தினங்களில் வழங்கப்படவுள்ள நிலையில், கடந்த காலங்களில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 900 பேர், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போராட்டக்காரர்கள், வடமாகாண சபை அட்சி காலத்தில், அப்போதைய மாகாண சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கத்திடம் 900 பேர் இருப்பதாக அறிக்கைகள் கொடுக்கப்பட்டப் பின்னர், தற்போது 3,000 சுகாதார தொண்டர்கள், நேர்முகத் தேர்வில் தோற்றியுள்ளதாகவும், எவ்வாறு 3,000 பேர் நேர்முகத் தேர்வில் தோற்ற முடியுமென்றும் கேள்வி எழுப்பினர்.

அத்துடன், 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார தொண்டர்களை உள்வாங்காது, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சுகதார தொண்டர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டும், நேர்முகத் தேர்வில் கூட தம்மை தெரிவு செய்யவில்லை என்றும், அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முன்னாள்ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நியமனம் வழங்குவதாக வாக்குறுதி அளித்த பின்னர், இடமாற்றம் பெற்றுச் சென்றதாக சுட்டிக் காட்டியதுடன், தற்போதைய ஆளுநர் வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார தொண்டர்களாகக் கடமையாற்றியவர்களும், இந்த நேர்முகத் தேர்வில் தோற்றிய பின்னர், தமக்கான நியமனங்கள் கிடைக்கப்பெறவில்லையெனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், யுத்த காலத்தில் வைத்தியசாலைகளில் பல நோயாளர்களின் மலசலம் உட்பட பல கழிவுகளையும் அள்ளி சுமந்த தாம், இன்று வீதியில் நிற்பதாகவும் கூறினர்.

 எனவே, பல ஆண்டு காலமாக சுகாதார தொண்டர்களாகக் கடமையாற்றிய தமக்கு, நியமனம் வழங்க வேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் வடமாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .