2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுயநலத்தை விட்டு அநீதிக்கு குரல் கொடுங்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, எனக்கென்ன?' என்று சிந்திக்கும் சுயநலப்போக்கும், தனது வீட்டு முற்றம் வரைக்கும் பிரச்சினை தேடிவரும் வரை காத்திருக்கும் மனோநிலையுமே கூட்டு வன்புணர்வு படுகொலைகளுக்கு மூலக் காரணியாகும்' என, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல்போன உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு, கிழக்கு மாகாண சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'சரண்யா, வித்தியா, சேயா, ஹரிஸ்ணவிக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை, நாளை எனது வீட்டு பெண் பிள்ளைக்கு நடக்காது என்பதற்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு? என்பதை சிந்தித்து அனைவரும் வீதியில் இறங்கிப்போராட முன்வரவேண்டும்.

தமக்கே உரித்தான மொழி, கலை, கலாசாரம், பாரம்பரியம், மரபுரிமைகளை பாதுகாத்து அடையாளம் பெற்ற தமிழ் இனம், தற்காலத்தில் நெறிகெட்டு போகும் நடத்தைகளால் பிற இனங்களுக்கு முன்னே கூனிக்குறுகி அவமானப்பட்டு நிற்கும் நிலைமையை கண்டு கோபமடைகின்றோம்.

வடக்கு, கிழக்கு பிரதேசத்திலேயே அண்மைக்காலமாக குடும்ப வன்முறை மற்றும் வன்புணர்வுகளால்; பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கொடூர சம்பவங்களுக்கு போதைப்பொருள் மற்றும் ஆபாச காணொளிகள் இரண்டாம் தர காரணிகளாக அமைகின்றன.

இந்த சுயநலப்போக்கிலிருந்தும் தனிநபர் நலச்சிந்தனையிலிருந்தும் தமிழ்ச் சமுகம் விடுபட வேண்டும். அநீதிக்கு எதிராக தமிழ்ச் சமுகம் குரல் கொடுக்க வேண்டும்' என அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X