2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தமிழ் தெரிந்த சிங்கள அலுவலர்கள் உருவாகவுள்ளனர்: சி.வி.

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கில் பெரும்பான்மையின மாணவ, மாணவியர் தமிழ் படிக்கத் தொடங்கியுள்ளனர். விரைவில் தமிழ் தெரிந்த பெரும்பான்மையின அலுவலர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்றிருந்தால் என்னாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் கல்வி வலயம் ஆசிரியர் மாநாடு – 2016, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கல்விப் புலத்தில் மிகவும் மேம்பட்ட நிலையில் விளங்கிய யாழ்ப்பாணம், இப்போது அதன் தரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் எம் மாணவ மாணவ, மாணவியரை கல்வியில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டிய தார்மீகக் கடமை எம் அனைவருக்கும் விசேடமாக, ஆசிரியர்களுக்கு உண்டு என்பதை மனதில் இருத்தி எமது கடமைகளை முன்னெடுத்துச் செல்லல் அவசியமாகும்.

எமது மாணவ, மாணவியர் ஏன் அலுவலர்கள் கூட  தொடர்ந்தால் போல் 2 பந்திகள் பிழையின்றி ஆங்கிலத்தை எழுத முடியாத நிலையில் இருப்பது வருத்தத்தைத் தருகின்றது. மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற எமது மாணவ, மாணவியர் தடங்கலின்றி, தடையின்றி, பயமின்றி நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் போய் வரலாம் என்பதை நாம் மறத்தலாகாது. எமது ஆசிரிய ஆசிரியைகளும் அவ்வாறே பாண்டித்தியம் பெற வேண்டும். இப்பொழுது அடுத்தவர் மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். அதனை நடைமுறைப்படுத்த நாங்கள் முன்வர வேண்டும். எங்கள் மொழியை மட்டும் நாம் தெரிந்திருந்தால் மற்றவர்கள் பற்றி எமக்கு வெறுப்பும் பிழையான கருத்துக்களுமே மிஞ்சும். ஆகவே எமது ஆசிரிய சமூகமும் மாணவ சமூகமும் மும்மொழித் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சியைப் பெற்று விட்டு எமக்கு ஆங்கிலம், சிங்களம் இரண்ம்; தெரியாது என்று வேண்டுமானால் அரசியல் காரணங்களுக்காகக் கூறுங்கள். சீனத் தலைவர்கள் நன்றாக ஆங்கில அறிவு பெற்றவர்கள். ஆனால் சீன மொழியிலேயே பேசுவார்கள்.

கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றமாகிய வலிந்து கற்றலை கைவிட்டமை போன்ற காரணங்களாலேயே பிறமொழிகளில் ஆர்வம் குன்றி அம்மொழிகளில் புலமையற்றவர்களாக எமது மாணவ, மாணவியர் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். இப்போது எமது மாணவ, மாணவியர் ஆங்கிலப் புலமை மிக்கவர்களாகவும் சிங்களமொழித் தேர்ச்சி பெற்றவர்களாகவும் கண்டதையும் கற்கக்கூடிய ஆற்றலை உடையவர்களாகவும் வாசிப்புப் பழக்கத்தை கைக்கொள்பவர்களாகவும் மாற்றப்பட வேண்டும். தெற்கில் பெரும்பான்மையின மாணவ, மாணவியர் தமிழ் படிக்கத் தொடங்கி விட்டார்கள். விரைவில் தமிழ் தெரிந்த பெரும்பான்மையின அலுவலர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்றிருந்தால் என்னாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அண்மைக்காலமாக எமது மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை வேதனையைத் தருவதாக அமைகின்றது. யுத்த காலத்தில் கூட ஒழுக்கத்தை இறுக்கமாக கடைப்பிடித்த இந்தச் சமூகம், யுத்தம் முடிவுற்று சமாதான நிலை தோன்றிய பின்னர் ஒழுக்கக் குறைவுள்ள போதைப்பொருள் பாவனையில் நாட்டம் கொண்டிருப்பது மனவேதனையைத் தருகின்றது. வேண்டுமென்றே தமிழ்ச் சமூகத்தை நன்கு திட்டமிட்ட முறையில் அழித்தொழித்து அவர்களின் கல்வி, கலாசாரம், மேம்பாடு ஆகிய அனைத்தையும் சீரழித்து ஒட்டுமொத்தத்தில் இந்த இனத்தை இல்லாமல் செய்யும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவை அமைந்துள்ளனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எம்மைச் சுற்றி ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் தரித்து நிற்கின்றனர். அதற்கும் மேலாக கடற்படை, விமானப்படை, பொலிஸார் என காவற்படைகள் தரித்து நிற்கின்றன. அப்படியிருந்தும் பல்லாயிரம் கிலோக்கள் கேரளக் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் தினமும் கடல் மூலமாக கடத்தி வரப்படுவதாக அறிகின்றோம். அப்படியானால் இவற்றிற்கு யார் காரணம்? எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாகச் சீர்குலைக்க வேண்டும் என்ற முழு நோக்கில், பாடசாலைகளை நோக்கியதாக இப்போதைப்பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிகின்றோம்.

எத்தனை தான் பிறரின் தூண்டுதல்கள் இருப்பினும், எமது மக்கள் எமது இளைஞர் சமுதாயம் இவற்றிற்கு அடிமையாகி ஒரு சில நன்மைகளுக்காக இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவது அவர்களின் தாயைப் பழிக்குஞ் செயலுக்கு ஒப்பானதாகும்.
இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நீதிபதிகள் இறுக்கமான கட்டளைகளைப் பிறப்பித்து கடுமையான முயற்சிகனை மேற்கொண்டிருக்கும் அதேநேரம் அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், மேலும் பெற்றோர்கள் எனப் பலரும் இவை பற்றிய மக்கள் விழிப்புணர்வைத் தொடர்ந்து  ஏற்படுத்திக் கொண்டிருப்பது முக்கியம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X