2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

திலீபனின் நினைவு ஊர்தி மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம்

Editorial   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தி திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

15ம் திகதி பொத்துவில் பகுதியில் இருந்து நல்லூர் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்த திலீபனின் நினைவு ஊர்தியானது ஞாயிற்றுக்கிழமை  (17) மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் பகுதியில் இருந்து ஆரம்பித்து ஆலங்கேணி, தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நோக்கி ஏ6 பிரதான வீதியூடாக பயணித்தது.

அப்போது சர்தாபுர பகுதியில் வீதியில் கற்களைப் போட்டு வழிமறித்து குறித்த வாகனம்   பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிலரால்  தாக்கப்பட்டுள்ளது. 

இதன்போது வாகனத்தில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனும் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

அழகராசா விஜயகுமார் கண்டனம்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.

 அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தியானது தமிழர் தலைநகரிலேயே தாக்கப்பட்ட இந்தச் சம்பவமானது வடகிழக்கு மாகாணங்களில் இன்னமும் தமிழ் மக்களுக்கு அவர்களது குறைந்த பட்ட நினைவுகூரும் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு சாட்சியமாகும்.

அகிம்சையைப் பற்றிப் போதித்து அகிம்சாவாதிகளிற்கும் சனநாயகவாதிகளிற்கும் முன்னுதாரணமாக விளங்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் இந்த நினைவேந்தலை தாக்கும் சிங்கள அடிப்படைவாதக் கும்பல்களைப் பார்த்தாவது உலகச் சமூகமும் நம் மக்களும் நமது இந்த நிலை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்  என்றுள்ளது.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

பு.கஜிந்தன்

தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம் தெரிவித்தது.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊடக பேச்சாளர் இ.தர்ஷன் கண்டணம் தெரிவித்தார்.

இதன் போது வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சி.ஜெல்சின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

 எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் என குறிப்பிட்டனர்.

சிவஞானம் சிறீதரன் எம்.பி கண்டனம்

பு.கஜிந்தன்

தியாகி திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதல், இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை கப்பற்றுறையருகே சிங்களக் காடையர்கள் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் கனன்றெரிகிறது என்பதை இன்னுமொருமுறை நிரூபணம் செய்திருக்கிறது.

இருநாட்டு அரசுகளின் கவனத்தையும், ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை நியாயத்தையும் கோரி 36 ஆண்டுகளின் முன்னர் அகிம்சைப் போராட்டம் நடாத்திய, திலீபன் என்கிற தியாகியின் உருவப்படத்துக்கும், அதைத்தாங்கிய ஊர்திக்கும், அவ்வூர்தியோடு இணைந்து பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கும் இந்த நிலை என்றால், எந்தவித நியாயப்பாடுகளுமற்று இத்தனை ஆவேசமாய் இனவாதத்தைக் கக்கும் சிங்களவர்களோடு, இந்த நாட்டில் தமிழர்கள் இணைந்து வாழ்வது எத்தனை தூரம் சாத்தியமானது என்பது பற்றி, இனிமேலேனும் சர்வதேச சமூகம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். 

ஜெனீவா அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமநேரத்தில், தமிழர்களையும், அவர்களது போரியல் நியாயத்தையும், இனத்துக்காக நிகழ்த்தப்பட்ட தியாகத்தையும் காலில் போட்டு மிதித்து, தங்களது அடக்குமுறை மனோபாவத்தை சிங்கக்கொடிகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ள சிங்களக் காடையர்களது செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழர்களது உணர்வுநிலைகள் குறித்தும், அவர்களது சுயாதீன உரித்துகள் குறித்தும் எப்போதும் கள்ளமெளனம் காக்கும் ஆட்சி அதிகாரபீடங்கள், இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நாம் துளியும் எதிர்பார்க்கவில்லை. 

இருந்தபோதும், ஒரு சுதேசிய இனத்தின் அடிப்படை உணர்வுநிலைகளை வலிந்து சீண்டி,  இரு இனங்களுக்குமிடையிலான முரண்நிலைகளை மீண்டும் மீண்டும்  கொதிநிலைக்குத் தள்ளி அரசியல் லாபம் ஈட்டும் சக்திகள் இனங்காணப்பட வேண்டும். ஈழத்தமிழர்களது தன்னாட்சிக் கோரிக்கை நியாயபூர்வமானது என்ற செய்தியை சர்வதேச சமூகத்தின் செவிகளில் அறைகூவல் செய்வதற்கு இந்தச் சம்பவம் ஓர் சாட்சியமாய் அமைந்திருக்கிறது. இதன் விளைவென்பது, எமது மக்களிடத்தே இனம் குறித்த ஓர்மத்தை தணியாது தகிக்கச் செய்துகொண்டே இருக்கும் என்பதை சிங்களவர்களும் உணரும் காலமொன்று உருவாகியே தீரும் - என குறிப்பிட்டுள்ளார்.

சரவணபவன் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் அரசாங்கத்தினது ஏற்பாட்டிலேயே நடைபெற்றன என்பதையும், பொதுஅமைதியைக் குலைக்கின்றது என்பதைக்காட்டி நினைவேந்தல்களைத் தடுப்பதற்கான அவர்களின் ஏற்பாடு இது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன்.

திருகோணமலையில் இருவேறு இடங்களில் வைத்து தியாகதீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீதும் சிங்களக் காடையர்கள் பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுவதற்கான முயற்சிகள் ஒருபுறம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, பாதுகாப்பு வேலிக்கு நிதி ஒதுக்கப்பட்டமையை தவறு என்று நிரூபிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

மறுபுறம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்களை முன்னெடுப்பதால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிஸார் காரணங்களை முன்வைப்பதற்கு ஏதுவாக சிங்களக் காடையர்களை ஏவிவிட்டு நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடந்தால் இவ்வாறான அமைதியின்மை ஏற்படும் என்பதை நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிக்கையிடுவதற்கு வசதியாகவே திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

காந்தி கூட செய்யத் துணியாத ஓர் அஹிம்சைப்போராட்டத்தை கண்முன்னே நடத்திக்காட்டி பாரத தேசத்தின் தோலுரித்தவன் தியாக தீபம் திலீபன் அஹிம்சாவாதியை நினைவுகூருவதற்கே இந்த நாட்டில் இடமில்லை. அஹிம்சைக்கு வன்முறையால் சிங்களக் காடையர்கள் பதிலளித்திருக்கின்றார்கள்.

 தந்தை செல்வா அன்று அஹிம்சையால் போராடியபோது சிங்களக் காடையர்கள் தாக்கியதால்தான் ஒரு கட்டத்தில் தமிழர்கள் திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள் என்ற வரலாற்றை 14 ஆண்டுகளில் மறந்துவிட்டார்கள்போலும். 

சிறிலங்கா பொலிஸ் எப்போதும் பௌத்த – சிங்கள பேரினவாதத்தின் அடிவருடிகளாகவே இருக்கின்றனர் என்பதற்கு அவர்கள் கண்முன்னால் நடந்த தாக்குதல் மிகச் சிறந்த உதாரணம்.

 பாதுகாக்கவேண்டிய பொலிஸாரே காடையர்களுக்கு ஒத்தாசை புரிந்தமையால்தான் இந்த நாட்டில் ஆயுதப்போராட்டம் முகிழ்ந்தது என்பதையும் மறந்துவிட்டார்கள்.

தேர்தல் வெற்றிக்காக சொந்த மக்களையே கொலைசெய்த கொடூரர்கள் ஆட்சியில், மீண்டும் இனவாதம் விதைக்கப்படுகின்றமை தெளிவாகத் தெரிகின்றது.

 தேர்தலுக்காக விதைக்கப்படும் இனவாதம் இலகுவில் அடங்காது. இந்த நாடு மீண்டும் ஓர் குருதிக் களரியை நோக்கியே செல்லப்போகின்றது என்பதற்கே கட்டியம்கூறுவதாகவே நேற்றைய சம்பவம் நடைபெற்றிருக்கின்றது, என்றுள்ளது.

  போராட்டத்துக்கு அழைப்பு

அடக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராளி ஒருவன் அகிம்சை வழியில் உயிரீந்துஇ உலகிற்கு ஈகத்தின்குறியீடாக விளங்குகின்றான். அந்தத் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவம் தாங்கிய ஊர்தியை அடித்து  உடைத்ததுடன் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களையும் தாக்கிச் சிங்கள இனவாதம் இனவழிப்பின் கோரமுகத்தைக் காட்டியுள்ளது. நாம் அனைவரும் புதன்கிழமை மாலை 3 மணிக்கு  அணிதிரண்டு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு இதனைத் தெரியப்படுத்துவோம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .