2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நன்னீர்த் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

George   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனக் கூறி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் என்பன இன்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.

வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டிலும், வடமராட்சி அபிவிருத்தி ஒன்றியம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாளையடி கடற்கரையில் புறப்பட்ட ஊர்வலம் மருதங்கேணி பிரதேச செயலகம் வரையில் சென்று அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடல்நீரை நன்னீராக்கும் இந்தத் திட்டத்தால் தங்களின் கடல் அதிக உப்பாவதாகவும், இதனால் மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

'எமது பிரதேசத்தை ஒருமுறையேனும் திரும்பிப்பார்', 'வடமாகாண சபையே! ஏன் எம்மை கொல்லத் துடிக்கின்றாய்?','அரசியல்வாதிகளே தவறிழைக்காதீர்கள்', 'வடமராட்சி கிழக்கை ஒதுக்காதே', 'எமது வளங்கள் எமக்கு வேண்டும்' ஆகிய கோசங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏற்பாட்டாளர்களில் சிலர், பிரதேச செயலர் கே.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கான மகஜர் கையளிக்கப்பட்டது.

மேற்படி திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வடமாகாண சபையால் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X