2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

நீதிபதிகளுக்கு இடமாற்றம்

எம். றொசாந்த்   / 2018 மே 11 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்தி முடித்த தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடமாற்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என பிரதம நீதியரசரால் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைத் தொடந்து, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 2015ஆம் ஆண்டு மே 20ஆம் திகதி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போதைய பிரதம நீதியரசர் கே.சிறிபவன், யாழ்ப்பாணத்துக்கு வந்து நிலைமையை ஆராய்ந்து இந்த நியமனத்தை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் நீதித்துறையை கட்டுக்கோப்புடன் முன்னெடுப்பதில் மாவட்ட நீதிபதிகள், நீதிவான்களுடன் இணைந்து தனது கடமைகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னெடுத்திருந்தார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நடந்த தடுப்புக்காவலிலிருந்த இளைஞன் ஒருவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கு தொடர்பில் சில இணையத்தளங்கள் ஊடாக விசமத்தனமான விமர்சனங்களைப் பரப்பி அவரை பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கிய போதும் தளராது அந்த வழக்கின் குற்றவாளிகளான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தில் ஒருவராக இருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சுமார் 400 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

இவர் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார்.

இவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2014 இறுதிவரை பணியாற்றியிருந்தார். பின்னர் வவுனியா மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்து மீளவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தவர். அத்துடன், வவுனியா மேல் நீதிமன்றில் அரசியல் கைதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளை துரிதமாக முடிவுறுத்தி நிரபராதிகளை விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .