2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்தவர் நீதிமன்றத்துக்கு வெளியில் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்டு வந்த ஒருவரை, யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து புதன்கிழமை (23) கைது செய்து நீதிமன்ற பொலிஸார், அவரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா பகுதியினை சேர்ந்த என்.என்.ஜக்சன் எனும் நபர் தனது முகப்புத்தகம் ஊடாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கடுமையாக விமர்சனம் செய்து வந்திருந்தார். 

அதாவது, இரண்டு மாணவர்கள் சுட்டுகொலை செய்யப்பட்டதற்கு நீதிபதி இளஞ்செழியன் பதில் கூறவேண்டும். அவர் மீது சமூக நல வழக்கு தாக்கல் செய்ய ஆராயவேண்டும். இச் சம்பவத்துக்கு நீதிபதி இளஞ்செழியன் காரணம் என கருதமுடியும் என பல விடயங்களை வியாக்கியானம் செய்து கருத்துவெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், மேற்படி நபர் பிறிதொரு வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (23) வந்திருந்தார். குறித்த நபர் தொடர்பில் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, மேற்படி நபர் நீதிமன்றினை விட்டு வெளியில் செல்லும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஆஜர்படுத்தியுள்ளனர். 

வவுனியா பகுதியினை சேர்ந்த மேற்படி நபர், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழர் மகா சபை சார்பில் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X