2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நீர் மாசு விவகாரம்: வழக்கு ஒத்தி வைப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்,செல்வநாயகம் கபிலன்

கழிவு எண்ணெய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவு எண்ணெய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள், மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ .யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது கடந்த வழக்குத் தவணையின் போது  வட மாகாண விவசாய அமைச்சர்  பொ .ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கு அடுத்த மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சர் வேறொரு நிகழ்வுக்குச் சென்ற காரணத்தால், அவர் வருகை தர முடியவில்லை என வடமாகாண சபையின் அபிவிருத்தி அலுவலர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க முற்பட்ட போதும், நீதவான் அதனை நிராகரித்து பிடிவிறாந்து பிறப்பிக்க முற்பட்டார்.

இந்நிலையில்,  அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜா, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பது தொடர்பில் கதைப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் வடமாகாண சபைக்கு இல்லையெனவும் இந்த அதிகாரம் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கே உள்ளதாகவும் மன்றுக்குத் தெரியப்படுத்தினார் .

அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம்  அதிகாரமில்லாத ஒரு சபை   நீர் மாசு தொடர்பான ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அறிக்கையை ஏன் தயாரித்தது? அந்த அறிக்கையை ஏன் வெளியிட்டது ? என வினாவியது.

கடந்த வழக்குத் தவணையின் போது வடமாகாண அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்  செயலாளர், நீர் மாசால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின்  அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்கள் ஆகியோரும்  இம் முறை வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கைகள் சமர்ப்பித்திருந்தனர்.  

ஏற்கனவே ஐந்து கிணறுகளில் ஈயம் கலந்திருப்பதாக  தேசிய  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்திருந்தது. அந்தக் கிணறுகள் யாருடைய கிணறுகள் என வினாவப்பட்ட நிலையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அது தொடர்பான விபரங்களை நேற்று  நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். குறித்த விபரங்களை சுகாதாரப் பரிசோதகர்கள் பெற்று அதற்குரிய நடவடிக்கையை எடுப்பார்கள். 

அடுத்த வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X