2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பான அவுஸ்திரேலியப் பயிற்சிநெறி

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக, நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம்' என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி, அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவ துறையுடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில், இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.

வடக்கில், நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினை காணப்படும் மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது. இதைக் கருத்திற்கொண்டு, பயிற்சியில் யாழ்.  மாவட்டத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்டத்தில் இருந்து 8 பேரும் தென்னிலங்கையில் இருந்து 7 பேரும் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இத்தகைய ஒரு பயிற்சியை ஏற்பாடு செய்து தருமாறு வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், அவுஸ்திரேலிய இயற்கை வளங்கள் மற்றும் கனிமத் திணைக்களத்தின் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் முன்வைத்திருந்தார்.

இதன் அடிப்படையில், இப்பயிற்சியை ஒழுங்கு செய்துள்ள சர்வதேச நீர் ஆராய்ச்சி மையம், யாழ். மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பை, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடமும் தென்னிலங்கைக்கான ஒருங்கிணைப்பை, கொழும்பில் இயங்கும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி எச்.மந்திரி திலகே என்பவரிமும் ஒப்படைத்திருந்தது.

விவசாய அமைச்சின் சார்பில் முன்னாள் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளரும் தற்போதைய பிரதிப் பிரதம செயலாளருமான எந்திரி சோ.சண்முகானந்தன், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் ச.சர்வராஜா, கை.பிரகாஷ;, பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா ஆகியோருடன் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், கலாநிதி க.சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மீனா செந்தில்நந்தனன், புவியியல் துறையைச் சேர்ந்த கலாநிதி லோறீன் இராஜசூரியர் ஆகியோரும் பங்கேற்றுள்ளார்கள். இவர்கள் இருவரும் நீர் தொடர்பான ஆய்வில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நீர் முகாமைத்துவம் தொடர்பான இப்பயிற்சிநெறி, எதிர்வரும் டிசெம்பர் 2 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X