2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு பாடசாலைகளுக்கு அழைப்பு

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வவுனியா உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவியொருவர் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து, வடமாகாண அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நாளை புதன்கிழமை (24) இரண்டு மணிநேரம் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'எமது பிரதேசங்களில் நடைபெறும் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும, அரக்கத்தனங்களுக்கும் இதுவரை எந்த நீதியும் கிடைத்ததில்லை. அஹிம்சை வழியில் நாம் செய்கின்ற எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் இதுவரை பயன் தந்ததில்லை.

காலங்காலமாக நாம் அனுபவித்து வருகின்ற துன்பங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை. இதற்காக நாம் எத்தனை வடிவமான போராட்டங்களை முன்னெடுத்தோம். அவற்றுக்கெல்லாம் இன்றுவரை நீதியான எந்தத் தீர்வுகளும் கிடைக்கவில்லை.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்தும், நீதி வழங்குமாறு கோரியும் பிரமாண்டமான ஒன்றுகூடலை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்தது. பல ஆயிரக்கணக்கானவர்கள் அதில் பங்கேற்றனர். வடபுலம் முழுவதும் ஸ்தம்பித்து நீதிகேட்டு ஆர்ப்பரித்தனர். ஆனால், இன்று வரை அதற்கான நீதி கிடைக்கவில்லை.

மாணவர்கள் மீதான வன்புணர்வு கொலைகள் நடந்தவண்ணம் உள்ளன. சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி தாம் நினைத்ததைச் செய்யும் துஷ்டர்கள் இந்த நாட்டில் உள்ள வரை எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. ஆனாலும், அஹிம்சை வழியை நாம் கைவிடக்கூடாது என்பதற்காக நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு எமது சங்கம் முழு ஆதரவை வழங்குவதோடு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஆளணியினர், மாணவ்ர்கள் பாடசாலை வளாகத்தில் காலை இரண்டு மணிநேரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும்.

அதேவேளை, க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு நடைபெறவுள்ள செய்முறைப் பரீட்சையில் எவ்வித இடர்ப்பாடுகளும் ஏற்படாதவண்ணம் எதிர்ப்பை வெளிப்படுத்தவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X