2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும்’

எம். றொசாந்த்   / 2018 மே 02 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்” என  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற உள்ளுர் பத்திரிகையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலருக்கு கொல்லப்பட்ட சில ஊடகவியலாளரின் கொலைகள் பற்றி விசாரிக்க விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு. எங்களுடன் நின்றால் என்ன, எழுக தமிழுடன் நின்றால் என்ன, உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் 2, 3 தடவைகள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் என்னைப் பற்றி அவதூறாக எழுகின்றார் எனவும் இனி எழுத கூடாது என நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெற்றிருந்தார்.

லசந்தவின் படுகொலையின் பின்னர் லசந்தவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வெளியேறி விட்டனர். சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் என்னிடம் வந்தார்கள். நான் ஆஜரானேன்.

முதல் வழக்கு தவணையின் முன்னிலையாகிய பின்னர் வீட்டுக்கு வந்த போது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் என் படத்தையும் என்னுடன் முன்னிலையான இளம் சட்டத்தரணிகளின் படங்களை போட்டு  “கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள்" என கட்டுரை எழுதி இருந்தார்கள். அதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதனை இரண்டு வாரத்தின் பின்னரே நீக்கினார்கள்.

லசந்தவின் அந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் குறுக்கு விசாரணை செய்திருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X