2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்க வேண்டும்

George   / 2017 மே 22 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதென, ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

யாழ். நகரில், ஞாயிற்றுக்கிழமையன்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன கலந்துகொண்டிருந்தன.

இதன்போது, பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்று தேவையற்றது எனவும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புத்  தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாதம் நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக, கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் பகிரங்கமாக கூறிவருகின்ற நிலையில், பயங்கரவாத தடைச் சட்டம் என்பதே தேவையற்றது என, இந்தக் கூட்டத்தின்போது,  அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாகத்  தீர்மானிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதாக்களை நீக்குவதற்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் எனவும், இந்த அழுத்தத்தை மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் இணைத்துக்கொண்டு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது தவிர, தென்னிலங்கையில் உள்ள முற்போக்குக் கட்சிகளும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைத்துக்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது. நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள், போராட்டங்களை முன்னெடுத்து, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குமாறு, அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன், தமிழீழ விடுதலைக்கழக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் தலைவர் சுகு சிறிதரன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் கட்சியின் பொதுச் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, உப தலைவர் ஹென்றி மகேந்திரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் கலந்துகொள்ளவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X