2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பயனாளிகளிடம் புத்தாண்டு நிதி சேகரிக்க வேண்டாம்

Niroshini   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

'தமிழ், சிங்கள புத்தாண்டு சேமிப்புக்காக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்திப் பயனாளிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி பணம் அறவிட வேண்டாம்' என யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இன்று புதன்கிழமை (06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் வருடா வருடம் சித்திரை புத்தாண்டு சேமிப்பு காலத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தவிர்த்து கொள்ளும் வகையில், யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்துகின்றது.

யாழ். மாவட்ட மக்கள் 30 வருட காலங்கள் யுத்தத்தால் வீடு, தொழில் இழந்து பல இன்னல்களை அனுபவித்த மக்களை, எந்தவொரு உத்தியோகத்தரும் சேமிப்பு போட்டி காரணமாக மேலும் நெருக்கடிக்குள் தள்ளவேண்டாம்.

எந்தவொரு அதிகாரியும் தான் பாராட்டு பெறும் நோக்கில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இலக்குகளை வழங்கி சேமிக்கும்படி வற்புறுத்தினால், அதனை எமது சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதனை எமது சங்கம் மாவட்டச் செயலாளருக்கு கொண்டு சென்று மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளும்.

சமுர்த்தி வங்கிகள், வறிய மக்களுக்கு சேவைகளை வழங்கி, அவர்களை வறுமையில் இருந்து மேம்படுத்தவே உருவாக்கப்பட்டது. சமுர்த்தி வங்கிகள் தங்களுக்குள்ளே போட்டிதன்மையை ஏற்படுத்திக் கொண்டு ஏனைய வணிக வங்கிகள் இலாபம் உழைப்பது போன்று செயற்படுவதற்காக சமுர்த்தி வங்கிகள் உருவாக்கப்படவில்லை.

யாழ். மாவட்டத்தில் சில சமுர்த்தி வங்கிகள் புத்தாண்டு சேமிப்பு காலத்தில் கடனை வழங்கி அதனை சேமிப்பு கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு மக்களை வற்புறுத்தும் நடவடிக்கைகளுக்கு எமது உத்தியோகத்தர்கள் என்றும் துணைபோகக்கூடாது.

எமது உத்தியோகத்தர்கள் எந்தவொரு நிதிக் கொடுக்கல், வாங்கல் நடவடிக்கையின் போதும் மக்களுக்கு பற்றுச்சீட்டை வழங்க வேண்டும். பற்றுச்சீட்டை வழங்காது மேற்கொள்ளப்படும் எந்தவொரு நிதி நடவடிக்கையும் மோசடியாகவே கருதப்படும். எனவே உத்தியோகத்தர்கள் இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்துகொள்ள வேண்டும்' எனவும்; குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X