2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பலாலி ஆசிரியர் கலாசாலை சொந்த இடத்தில் இயங்கும்

Niroshini   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பலாலி ஆசிரியர் கலாசாலையை அதன் சொந்த இடமான பலாலியில் இயங்க வைக்கவும் அங்கு கற்கை நெறிகளை மீள ஆரம்பிக்கவும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (28) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்துக்கமைய, நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ள ஆவண செய்வதாக இணைத்தலைவர்கள் இதன்போது உறுதியளித்தனர்.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கலாசாலையின் அதிபர் எம்.இக்னேசியஸ் கூறுகையில்,
ஆரம்பத்தில் பலாலி ஆசிரியர் கலாசாலை, பலாலியில் 54 பரப்புக் காணியில் இயங்கி வந்தது. 13க்கும் மேற்பட்ட துறைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது ஒரு கற்கைநெறியை கூட வழங்க முடியாத சூழல் காணப்படுகின்றது.

சிறிது சிறிதாக கற்கை நெறிகள் பிடுங்கப்பட்டு, இறுதியாக ஆங்கிலமும் முகாமைத்துவ உதவியாளர் பயிற்சி நெறியுமே இருந்தது. தற்போது அவையும் நிறுத்தப்பட்டுவிட்டன.

இங்கு கற்பித்த ஆசிரியர்களை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு மாற்றிவிட்டார்கள். தற்போது இங்கு ஆசிரியர்களும் இல்லை, கற்கை நெறியும் இல்லை. கூடவே தளபாடங்களும் இல்லை. தற்போது, எனக்கும் இடமாற்றம் வந்துள்ளது. நானும் சென்றுவிட்டால் பலாலி ஆசிரியர் கலாசாலை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.

எனவே, இக்கலாசாலையை தற்காலிகமாக வேறு இடத்திலாவது தொடங்குவதற்கும் சொந்த இடத்தில் மீள இயங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதற்கமையவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X