2025 ஜூலை 19, சனிக்கிழமை

பஸ் சேவையின்றி மக்கள் பாதிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவியிலிருந்து கொல்லவிழாங்குளம், அம்பாள்புரம் ஊடாக போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதால் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

மல்லாவியிலிருந்து அனைத்து இடங்களுக்குமான பேருந்து சேவைகள் இவ்வீதியூடாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது பாதை சீரின்மையை காரணம் காட்டி அனைத்து பஸ் சேவைகளும் வடகாடு ஊடாக செல்கின்றது. இதனால் வன்னி விழாங்குளம் பாடசாலைக்கு செல்கின்ற 55 மாணவர்களும் மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு செல்லும் 15 மாணவர்களுமாக கிட்டத்தட்ட 70ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் அம்பாள்புரம் கொல்லவிளாங்குளம் பிரதேசத்தை சேர்ந்த இந்தவழியில் வசிக்கின்ற கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,500 அங்கத்தவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து பஸ்களும் இந்த வீதியூடாகவே போக்குவரத்து செய்து வந்த நிலையில், தற்போது ஒரு பஸ் மட்டுமே இந்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடுகிறது. அந்த பஸ் காலை  8.10 மணியளவில் தமது கிராமத்துக்கு வருவதால் மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலைக்கு செல்ல முடியாதுள்ளது.

 தமக்கு ஒரு பாடசாலை பஸ் சேவையை அல்லது உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு செல்லக்கூடியவகையில் ஒரு பஸ் சேவையை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை இப்பகுதியில் வாழ்கின்ற பொதுமக்கள் தமது தேவைகளுக்காக நகர்ப்பகுதிகளுக்கு செல்வதாயின் பல மைல் தூரம் நடந்து சென்று பஸ் சேவையை பெறவேண்டியுள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான போக்குவரத்து சேவையை ஒழுங்குசெய்து பாடசாலை மாணவர்கள், பொதுமக்களின் போக்குவரத்து பிரச்சினையை சீர்செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X