2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பாதுகாப்பு உத்தியோகத்தர் நிரந்தர நியமன விடயத்தில் மீள்பரிசீலனை வேண்டும்

George   / 2016 மே 21 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இராணுவம், பொலிஸ், கடற்படை, விமானப்படை என்பவற்றில் பயிற்சி பெற்றவர்களுக்கே இலங்கை வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தராக நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற நிபந்தனை வடக்கு, கிழக்குக்கு நீக்கப்பட வேண்டும். அதன் மூலமே கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர்கள் நிரந்தர நியமனம் பெற முடியும்' என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன், அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். 

இது தொடர்பில் அமைச்சருக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, பிரதமராகவிருந்த போது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை வங்கிகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்தீர்மானத்துக்கு அமைவாக பாதுகாப்பு உத்தியோகத்தராக முதல் ஆறு மாதங்கள் கடமையாற்றிய பின்னர் அவர்களுக்கான தற்காலிக ஒப்பந்தம் வழங்கப்படும். 

தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய பின்னர் அவர்கள் நிச்சயமாக நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அசாதாரண நிலைமைகள் நிறைவுக்கு வந்ததன் பின்னர், தற்போதைய நிலையில் அன்றாட ஜீவனோபாயத்தை நிலைநிறுத்துவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ரக்னா லங்கா பாதுகாப்பு லிமிட்டெட் நிறுவனத்தில் தம்மை இணைத்துக்கொண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக பணியாற்றி வருகின்றனர். 

இதில் வடக்கு மாகாணத்தில் மட்டும் கடந்த பத்து வருடங்களாக 109 பேர் கடமையாற்றி வருவதோடு. கிழக்கு மாகாணத்திலும் இந்த தொகைக்கு சமனாக கடமையாற்றி வருகிறார்கள். இந்நிலையில், அவர்கள் தொடர்ந்தும் கடமையில் நீடிக்க முடியாததொரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவுள்ளது.

அண்மையில் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவலின் பிரகாரம் தற்போது பாதுகாப்பு உத்தியோத்தர்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் இராணுவப்பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பலர் தமது தொழில்வாய்ப்புக்களை இழக்கவேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் அன்றாட ஜீவனோபாயம், எதிர்காலம், என அனைத்து விடயங்களுமே நெருக்கடிக்குள்ளாகும் நிலைமை ஏற்படும் அபாயமுள்ளது.

ஆகவே வடக்கு, கிழக்கு பிரதேசத்தைப் பொறுத்தவரையில் மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக அசாதாரண நிலைமைகளே காணப்பட்டன. அதனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான தீர்மானத்தை மீளப்பரிசீலிக்க வேண்டும். 

குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றிக்கொண்டிருப்பவர்களே தொடர்ந்தும் அப்பணியில் நீடிப்பதற்கும் வழிவகைசெய்வதோடு நிரந்தர நியமனங்களின் போது அவர்களை உள்வாங்கவேண்டும். அதற்கு ஏற்ற வகையில் குறித்த அறிவிப்பு மாற்றப்பட்டு வடக்கு, கிழக்கிற்கு விசேட சலுகை வழங்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன்.

மேலும், இராணுவப்பயிற்றி பெற்றவர்கள் என்ற பெயரில் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களை இப்பதவிக்கு நியமித்து தற்போது கடமையில் உள்ளவர்களை நீக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவேண்டாம் என தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.   தற்போது கடமையில் உள்ளவர்கள் அவ்வாறு பயிற்சி பெற்றிருக்காது விட்டால் அவர்களுக்கான பயிற்சியை வழங்கி அவர்களின் தொழில்களை உறுதிப்படுத்தப்படவேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X