2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மனைவி கொத்திக் கொலை:கணவனுக்கு மரணதண்டனை

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியைச் சேர்ந்த ஜெயசுதா சிவசீலன் என்பவரைப் கோடாரியால் கொத்திக் கொலை செய்த, அவரது கணவரான நாகராசா சிவசீலன் என்பவருக்கு மரணதண்டனை விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வியாழக்கிழமை (25) தீர்ப்பளித்தார்.

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியைச் சேர்ந்த ஜெயசுதா சிவசீலன் என்பவர், குடும்ப பிரச்சினை காரணமாக தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கோடாரியால் சரமாரியாகக் கொத்தி, 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதியன்று கொலை செய்யப்பட்டார்.

சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டது.

கொலைக்குற்றச்சாட்டில் அவரது கணவரான நாகராசா சிவசீலன் என்பவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 இந்நிலையில் இந்த வழக்கு, கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மாதம் 01ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மாற்றப்பட்டது.

கொலை செய்யப்பட்டவரின் அயலவர்கள் வழங்கிய  சாட்சியங்கள், எதிரிக்கு எதிராகப் பதியப்பட்டது. கொலை இடம்பெற்ற தினத்தன்று குறித்த பெண் தனது வீட்டிலேயே இருந்ததாகவும், அவரது கணவனே அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்றதாகவும் அயலவர் ஒருவர் சாட்சியமளித்திருந்தார்.

 மேலும், வீட்டில் அவலக்குரல் கேட்டதாகவும் தகாத வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றதாகவும், இரவு 9 மணியளவில் உரத்த அவலக்குரல் கேட்ட பின் குறித்த வீடு அமைதியானதாகவும் பிறிதோர் அயலவர் சாட்சியமளித்திருந்தார்.

 கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற வழக்கின் போது, 24ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். எனினும், புதன்கிழமையன்று (24), வடமாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமையால் நீதிமன்றச் செயற்பாடுகள் ஸ்தம்பித்திருந்தன. எனவே, குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (25) எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், தீர்ப்பு வழங்கப்பட்டது.  இதன்போது குற்றவாளி மனைவியை கொலை செய்யும் நோக்குடனேயே சரமாரியாக கொத்தி கொலை செய்துள்ளார்.

அத்துடன் கேவலப்படுத்தும் நோக்குடன் கொலை செய்யப்பட்ட பெண் நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளார் என நீதிபதி தெரிவித்தார்.  விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகமின்றி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டதையடுத்து, மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X