2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முக்கொலைக் குற்றவாளிக்கு 3 மரண தண்டனைகள்

Menaka Mookandi   / 2017 மார்ச் 30 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதியன்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிக்கு, மூன்று மரண தண்டனைகள் விதித்து, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று வியாழக்கிழமை (30) தீர்ப்பளித்தார்.  

தனஞ்செயன் என்ற மேற்படிக் குற்றவாளி, முக்கொலைகளைப் புரிந்த குற்றச்சாட்டுக்கு மூன்று மரண தண்டனைகளும் இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்துக்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதப் பணமும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்தே, நீதிபதி தீர்ப்பளித்தார்.  

குறித்த தீர்ப்பில் மேலும் நீதிபதி தெரிவிக்கையில்,

குறித்த சம்பவமானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 கொலைகளும் திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளன. மற்றைய இருவரையும், கொலை செய்யும் நோக்குடனேயே வெட்டி காயமேற்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், எதிரியான பொன்னம்பலம் தனஞ்செயனுக்கு, மேற்படி தண்டனைகளை வழங்கித் தீர்ப்பளிக்கிறேன்.

மேல் நீதிமன்றில், மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் போது, மன்றில் இருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறும் மின் விளக்குகளை அணைக்குமாறும் பணித்த நீதிபதி, தீர்ப்பினை எழுதிய பின்னர் தீர்ப்பெழுதிய பேனாவை முறித்தார்.

மேற்படி குற்றவாளி, தனது மனைவியின் தாயான நி.அருள்நாயகி, மனைவியின் தம்பியான நி.சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரைப் படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரைப் படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டிக் காயமேற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .