2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மிருக பலிக்கான தடை: அகில இலங்கை இந்து மாமன்றம் வரவேற்பு

George   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

இந்து ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையானது, சைவ மதத்தின் உன்னத கொள்கையையும், ஆலயத்தின் புனிதத்தன்மையும் மேம்படுத்த உதவுமென அகில இலங்கை இந்து மாமன்றம் தெரித்துள்ளது.

ஆலயங்களில் இடம்பெறும் மிருக பலிக்கு இடைக்கால தடையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விதித்தமையை வரவேற்று இந்து மாமன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'சமுதாயத்திலுள்ள இவ்வாறான மூடக் கொள்கைகளையும் மதத்துக்கு முரணான செயல்களையும் தடுக்கும் உரிமை, நீதிமன்றங்களுக்கும் சமய அமைப்புக்களுக்குமே உரியதாகும். இவ்வகையில் நீதிமன்றத்தின் இந்த தடையுத்தரவு மிகவும் போற்றுதற்குரியது.

அண்மையில், யாழ். மாவட்டத்தின் சங்கானை மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேசங்களில் இவ்வாறான மிருகபலி நடைபெற்றதையிட்டு நாம் எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயங்களில் மிருகபலியிடலை எமது சமயம் இதுவரை அங்கிகரிக்கவுமில்லை, எதிர்காலத்தில் அங்கிகரிக்கப்போவதுமில்லை.

சகல உயிரினங்களும் ஆண்டவனின் குழந்தைகளென்றும், சகல உயிரினங்களுடனும் அன்பு பாராட்ட வேண்டுமென்றே எமது சமயம் போதிக்கின்றது. அவ்வகையில் மிருகபலிக்கெதிரான நீதிமன்றத்தின் தடையுத்தரவைத் தொடர்ந்து இந்து சமய கலாசார திணைக்களம் விரைவில் இச்சட்ட வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துச் சட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்' என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X