2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மீள்குடியமராவிடின் காணிகள் அரச உடைமையாக்கப்படும்

Niroshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'பனிக்கன்குளம் அரச வீட்டுத்திட்டத்தில் ஒரு மாத காலத்துக்குள் பயனாளிகள் காணிகளை துப்பரவு செய்து குடியமர வேண்டும். இல்லையேல் காணி அரசுடமையாக்கப்படும்' என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற இந்த வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குள கிராமத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கென வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் இலவசமாக காணி வழங்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய் மானியமாகவும் இரண்டு இலட்சம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டது.

இதில், 50 பேர் குறித்த பகுதியில் வீடுகளை நிர்மானித்தனர். இருப்பினும், இவர்கள் இங்கு குடியேறாததன் காரணமாக பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளுக்கு ஏதுவான இடமாக மாறிவருகின்றது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'இந்த இடத்தில் வீட்டுத்திட்டத்தை பெற்றவர்கள் சிலர் வேறு இடங்களில் ஏனைய வீட்டுத்திட்டங்களை பெற்றிருப்பதாகவும் நான் அறிந்துள்ளேன்.

உங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் சமூக சீர்கேட்டுச்சம்பவம் இடம்பெறுகிறது எனின் நீங்கள்தான் அதற்கு பொறுப்பாளிகள் என்பதோடு, அவ்வாறான செயற்பாட்டுக்கு துண்டகோலாக அமைகிறீர்கள் என்றுதான் நான் கூறுவேன்.

எனவே அந்தவீட்டில் நீங்கள் இருக்கவேண்டும். அல்லது அந்த வீட்டினை நல்லமுறையில் வைத்திருக்கவேண்டும். வீடு தேவையில்லை எனில் வீட்டினை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.

'அபிவிருத்தி முழுமையாக்கப்பட்டால் தான் குடியிருப்போம் என்று கூறமுடியாது. நீங்கள் குடியிருந்தால் மட்டுமே தேவையான அபிவிருத்திகளை செய்த தரமுடியும்.

எனவே, ஒரு மாத காலத்துக்குள் துப்பரவு செய்த குடியிருக்காத காணிகள் அரச உடமையாக்கப்படும்.
மேலும், இங்கு காணிகளை பெற்று வீடு கட்டியவர்கள் வேறு இடத்தில் வீட்டுத்திட்டம் பெற்றிருந்தால், இந்த திட்டத்தை அவர்களுக்கு இரத்து செய்யப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X