2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாவை, சிவாஜிலிங்கத்தை தாக்கியவர்களுக்கு பகிரங்க பிடியாணை

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் கடந்த 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதியன்று, மாவை சேனாதிராஜா, என்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தமான வழக்கில், நாட்டை விட்டு தப்பியோடிய 1ஆம் மற்றும் 2ஆம் சந்தேகநபர்களுக்கு, பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் திருகோணமலை மேல் நீதிமன்றத்திலிருந்த இந்த வழக்கு, நேற்று புதன்கிழமை (26), முதன்முறையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே,  நீதிபதி மா.இளஞ்செழியன், மேற்கண்ட பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்றுறையில் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் இருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் படுகாயமடைந்திருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியரான ஏரம்பு பேரம்பலம், டெலோ ஆதரவாளர் யோகசிங்கம் கமல்ஸ்ரோன், ஆகியோர் உயிரிழந்தனர்.

சட்டவிரோத உறுப்பினர்களுடன் சேர்ந்து, இந்தத் தாக்குதலை நடத்தியதாக, நெப்போலியன் என்றழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸ், மதன் என்றழைக்கப்படும் நடராஜா மதனராஜா, ஜீவன் என்றழைக்கப்படும் அன்டன் சிவராஜா மற்றும் நமசிவாயம் கருணாகரமூர்த்தி என்ற நான்கு பேருக்கு எதிராக, 47 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம், சட்டமா அதிபரினால், திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையை, திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இருந்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாக, கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதியன்று, அன்றைய திகதியிடப்பட்ட கடிதமொன்றின் மூலம், சட்டமா அதிபரினால், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கிணங்க, நேற்று இந்த வழக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 3ஆம் மற்றும் 4ஆம் சந்தேகநபர்கள், மன்றில் ஆஜராகினர். தாங்கள் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லையெனவும் அவர்கள் கூறினர். அத்துடன், இந்த வழக்கை மேல் நீதிமன்றத்தில் நடத்துமாறும், ஜூரி சபை தேவையில்லை எனவும் கூறினர்.

இதனையடுத்து, மன்றில் ஆஜராகாமல் வெளிநாட்டில் மறைந்து வாழும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான திறந்த பகிரங்க பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார்.

“இந்த வழக்கு, ‘5 வருடங்களுக்கு கூடிய வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க வேண்டும்’ என்ற பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கமைய, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில், தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என நீதிபதி கூறினார். இதற்காக, 40 சாட்சியங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

​நேற்றைய வழக்கு விசாரணையில், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில், சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X