2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டு

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து, இதய துடிப்பு காட்டியுடன் இரு பெண்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியதை சி.சி.ரி கமராவின் உதவியுடன் கண்காணித்தோம்.

அதன் போது அவர்கள் இருவரும் சத்திரசிகிச்சை கூடத்திற்கு சென்று, அதில் ஒருவர் சத்திர சிகிச்சை கூடத்தினுள் செல்வதற்கு வைத்தியர்கள் உபயோகிக்கும் ஆடைகளை அணிந்து சத்திர சிகிச்சை கூடத்துக்குள் செல்ல முற்பட்ட வேளை அங்கிருந்த பெண் காவலாளிகள் ஊடாக அவர்களை பிடிக்க முற்பட்டோம்.

அதன் போது ஒருவர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் ஒருவரை மடக்கி பிடித்து இருந்தோம். பிடிக்கப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, தாம் இருவரும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து வைத்தியசாலையில் பல திருட்டுக்களில் ஈடுபட்டமையை ஒப்புக்கொண்டதுடன், வைத்தியசாலைக்கு சொந்தமான பொருட்களையும் திருடியுள்ளதாக ஒப்புகொண்டார்.

அதேவேளை அப்பெண்ணின் கைத்தொலைபேசியினை பரிசோதிக்க முற்பட்ட வேளை குறித்த பெண் எம்மிடமிருந்து தப்பி சென்று வெளியில் தயாராக இருந்த ஒரு ஆணின் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பியோடினார்.

அதன் பின்னர் நாம் குறித்த பெண்ணின் கைத்தொலைபேசியை ஆராய்ந்த போது அதில் "அம்மா" என குறிப்பிடப்பட்டிருந்த இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு, அதன் உரிமையாளர் தொடர்பில் கேட்ட போது, “நாங்கள் மட்டக்களப்பில் வசிக்கின்றோம். எனது மகள் யாழில் தங்கி இருந்து மருத்துவ படிப்பை மேற்கொள்கின்றார். அவரின் தொலைபேசி தான் இது” என கூறினார்.

அதன் பின்னர் நாம் அவரது மகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது, அவர் எங்கும் மருத்துவ படிப்பை மேற்கொள்ளவில்லை. அவர் வீட்டாரை ஏமாற்றி இங்கு தங்கியுள்ளார் என கண்டறிந்தோம்.

அதேவேளை குறித்த பெண்ணின் கைத்தொலைபேசியில் சேமிப்பில் இருந்த படங்களை பார்த்த போது, அதில் ஒரு ஆணுடன் ஜோடியாக உள்ள பல படங்கள் காணப்பட்டன. அந்த படங்களில் இருந்த ஆண் தான் மோட்டார் சைக்கிளில் தான் அந்த பெண் தப்பிச் சென்றார் என்பதனை கண்டறிந்தோம்.

அதன் பின்னர் குறித்த ஆண் தொடர்பில் விசாரித்த போது, அவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் எனவும், சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார் எனவும் கண்டறிந்தோம்.

அதேவேளை வைத்தியசாலையில் நோயாளிகளிடம் பணம், நகை என்பவற்றை திருடி வந்த மற்றுமொரு பெண்ணை அடையாளம் கண்டு அவரை பிடித்து விசாரித்த போது,

குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். அவருக்கு 30 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்துள்ளது. இவர் வைத்தியசாலைக்குள் நடமாடி நோயாளிகளின் நகைகள் பணங்களை திருடி வந்துள்ளார். இவரால் திருடப்படும் நகைகள் மிருசுவில் பகுதியில் வசிக்கும் இரு பெண்களின் உதவியுடன் விற்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  குறித்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ். பொலிஸாரிடம் தெரியப்படுத்தி உள்ளதாக மேலும் பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X