2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுக்கு புதிய வீடுகள்

George   / 2016 ஜூலை 22 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில், யாழ்ப்பாணம் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக, அரசாங்கத்தினால் 971 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, அங்கிகாரம் கிடைத்துள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அனைத்து இடம்பெயர்ந்தவர்களையும் மீள்குடியேற்றுவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கவனம் செலுத்தியுள்ளார்.

அந்தவகையில், உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி, நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான வீட்டுத்திட்டமொன்றை முன்னெடுக்கவும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில், தற்போது 31 நலன்புரி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றில், உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளான 971 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களில், 641 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்தக் காணிகளை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதற்கமைய, மேற்படி நலன்புரி முகாம்களிலுள்ள 971 குடும்பங்களுக்குமான 971 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக, 971 மில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நேற்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

இது தொடர்பில், அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சiவை அங்கிகாரம் வழங்கியுள்ள நிலையில், வீட்டுத் திட்டத்துக்கானப் பணிகள், வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கருணாதிலக்க மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X