2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ்.பல்கலைக்கழக விவகாரம்: 5 பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 18 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் திருமதி சரோஜினி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் யாழ்ப்பாணம்  பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, இன்று வெள்ளிக்கிழமை (18) யாழ்.நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையின் போது வழக்கை விசாரித்து வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இதில் கொலைச் செய்யப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலதிக தடையப் பொருட்களையும் ஏற்கெனவே நீதிமன்றில் சமர்பித்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவீ கண்காணிப்பு கமராக்களின் வன் தட்டுக்களை நீதிமன்ற பணிப்பின் பேரில் பெற்றுக் கொண்டதுடன் அவைகளை பகுப்பாய்வுக்காக கொழும்பு பல்கலைகழக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதில் பொலிஸ் தரப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று வெள்ளிக்கிழமை (18) வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் பிரகாரம் எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகள் சந்தேக நபர்களிடம் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கான அனுமதியை, பதில் நீதவான் திருமதி சரோஜினி இளங்கோவன் வழங்கியதோடு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் வெள்ளிக்கிழமை 02ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X