2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வடமாகாண சுற்றுலாத்துறை மீது அக்கறையீனம்

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையுமில்லை என்று வடமாகாண சுற்றூலத்துறை ஒன்றியத்தின் தலைவர் தவராஜ் திலகராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியின் 5ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வடமாகாண சபையில், சுற்றுலாத்துறைக்காக நியமிக்கப்பட்டிருப்பவருக்கு சுற்றுலாத்துறை தொடர்பில் பூரண அறிவில்லை. அவர் அது தொடர்பில் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இங்குள்ள மற்றைய அரசியல்வாதிகள், ஏனைய அதிகாரிகளும் அவ்வாறே செயற்படுகின்றனர்' என்றார்.

'மத்திய அரசாங்கமும் இங்குள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கான வழிகளை இலகுபடுத்துவதை விடுத்து, அவர்களுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றனர். கொழும்புக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விமான சேவை கிடையாது.

முதலீட்டாளர்கள், சிரம பயணம் மேற்கொண்டு ஏ – 9 வீதியூடாக வரமாட்டார்கள். அவர்கள், விமானப் பயணத்தையே அதிகம் எதிர்பார்ப்பார்கள். இராணுவ விமானங்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

அப்படியிருந்தும், இங்கு வந்து முதலிட வருபவர்கள் மீது அதிக திணிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 'ஏன்டா வந்தோம்' என்ற அளவுக்கு, இங்கு அவர்கள் முதலிட முடியாதளவுக்கு தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித தடைகளையும் இங்குள்ளவர்களால் போடமுடிவதில்லை.

மீண்டுமொரு யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு, வேலையற்ற இளைஞர் - யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பது அவசியமாகிறது. வேலைவாய்ப்பு இன்மையால் ஏற்படும் விரக்தியே, இளைஞர் - யுவதிகளை யுத்தத்தில் ஈடுபடத் தூண்டியது. யுத்தத்தில் பயன்படுத்திய அவர்களின் திறனை பொருளாதார விருத்திக்கு பயன்படுத்தினால், அவர்களால் நாடு முன்னேறும்.

அந்தளவுக்கு அவர்களின் திறனானது யுத்தத்தில் காணப்பட்டது. ஆகவே, அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்தி, சுற்றுலாத்துறையை வடமாகாணத்தில் எழுச்சியுறச் செய்து இளைஞர் - யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்' என தவராஜ் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X