2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வட மாகாண அமைச்சருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Niroshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் மின்சார சபையால் வெறுமனவே நிலத்தில் விடப்பட்டு, பரவிய கழிவு எண்ணெயால் அப்பகுதி கிணறுகள் பாதிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் அழைப்பாணை விடுக்கப்பட்ட வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (15) மன்றில் ஆஜராகி,  வியாழக்கிழமை (17) வழக்குத் தவணையில் கலந்துகொள்ள முடியாது, தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி தருமாறு மன்றில் கோரினார்.

கடந்த வழக்குத் தவணையில் (பெப்ரவரி 17ஆம் திகதி) மன்றில் ஆஜராகாமைக்கு அமைச்சரை எச்சரித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், அமைச்சர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதாகவும் அடுத்த தவணையில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

சுன்னாகம் மின்சார சபை வளாகத்தில் வெறுமனவே நிலத்தில் விடப்பட்ட கழிவு எண்ணெயால் அப்பிரதேச கிணறுகளுக்கு கழிவு எண்ணெய் பரவியமைக்காக தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய பிரதேசங்களின் பொதுச்சுகாதார பரிசோதகர் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

பாதிக்கப்பட்ட கிணறுகளில் கழிவு எண்ணெய் இருக்கின்றதா? இல்லையா? என ஆய்வு செய்து  கண்டறிவதற்கு வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தமது ஆய்வில் குறித்த கிணறுகளில் கழிவு எண்ணெய் இல்லை எனக்கூறியிருந்தனர்.

ஆனால், அந்தக் கிணறுகளில் உள்ள நீரைப் பருகலாமா? இல்லையா? என்பது தொடர்பில் கூறவில்லை.
மேற்படி வழக்கில் ஆய்வுக்குழுவின் அறிக்கை பிரதான விடயமாக இருப்பதால், நீரைப் பருகுவது தொடர்பான விளக்கத்தை விவசாய அமைச்சர், பெப்ரவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கில் மன்றில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், அந்த வழக்கில் விவசாய அமைச்சர் மன்றில் ஆஜராகாமையால் அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்க நீதவான் முயற்சித்த வேளை, அமைச்சர் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி, ஸ்ரீ அடுத்த தவணையான மார்ச் 17 ஸ்ரீஆம் திகதி மன்றில் ஆஜராவார் எனக்கூறியிருந்தார். இதனால் பிடியாணை ரத்துச் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு வியாழக்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடவிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (15) தனது சட்டத்தரணியூடாக மன்றில் ஆஜராகிய விவசாய அமைச்சர், தனது வெளிநாட்டு பயணத்துக்கான அனுமதியை பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X