2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘வழிவிட ஆராய்கிறேன்’

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்   

வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என உத்தரவாதம் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில், மேற்படி இரு அமைச்சர்களும் தொடர்ந்து தங்களின் கடமைகளை செய்வதற்கான வழிவகைகளை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.  

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக தீர்வினை காண்பதற்காக, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இருவரும் இணைந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை நேற்று திங்கட்கிழமை (19) காலை தனிதனியாக சந்தித்தனர்.  

இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,    

வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்  அதற்காக அவர்களுடன் பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், மற்றும் மத தலைவர்கள் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.  

அதனடிப்படையில் மேற்படி இரு அமைச்சர்களும் தொடர்ந்து தங்களின் கடமைகளை செய்வதற்கான வழிவகைகளை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறேன்.

இதனடிப்படையில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பல்வேறு தரப்பினருடனும் இணைந்த வகையில் தொடர்ந்து எடுத்து வருகின்றோம்.  

என்னை சந்தித்து பேசிய மத தலைவர்கள் பிரதானமாக தற்போதைய நிலையில் தமிழர்களுக்கிடையில் பிளவுகள் தேவையற்றவை என்பதுடன் பிளவுகள் நல்லதல்ல எனவும் கூறியிருக்கின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X