2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘வாள்வெட்டுச் சந்தேக நபர்களை இனங்காட்ட முடியவில்லை’

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 29 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் இனங்காட்ட முடியவில்லை என இரண்டாவது சாட்சி தெரிவித்தார். எனினும் முதலாவது சாட்சி நீதிமன்றில் முன்னிலையாகாததால் சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் நேற்று (28) உத்தரவிட்டார்.

தைப்பொங்கல் தினமான கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இளைஞர்கள் சிலர் இருவரை துரத்தி வந்து வாளால் வெட்டினர். இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டாடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த ஒருவரும் ஓட்டுமடத்தைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் ஆவா குழுவைச் சேர்ந்த 19, 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், சாட்சிகளை ஒழுங்குபடுத்தி அடையாள அணிவகுப்பை  நடத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் சந்தேநபர்கள் மூவரும் நேற்று (28) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். முதலாவது சாட்சி மன்றில் தோன்றத் தவறிய நிலையில் இரண்டாவது சாட்சி முன்னிலையானார்.

சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களை இனங்காட்ட தன்னால் முடியவில்லை என இரண்டாவது சாட்சி மன்றுரைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X