2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வீடற்றவர்களின் ஆதங்கங்களை நிவர்த்திப்பேன்

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக இக்கிராமத்தில் வீடுகள் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சுன்னாகம், ஊரெழு மேற்கு பொக்கணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முத்தமிழ் சனசமூக நிலையக் கட்டட திறப்பு விழா மற்றும் முத்தமிழ் முன்பள்ளி சிறார்களுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றன. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கடந்த காலங்களில் எமது மக்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தக் கூடியதான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதெல்லாம் தவறான அரசியல் தலைமைகள், அவற்றை உரிய முறையில் பயன்படுத்தியிருக்காமை எமது கிராமங்களின் அபிவிருத்தி பின்னடைவுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.

'இக்கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 40 வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அவை திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்பதை மக்களின் கோரிக்கை ஊடாக அறிந்துகொள்ள முடிந்தது.

அத்துடன் இங்கு பல குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லாத நிலையும் உள்ளதாக எனது கவனத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இப்பகுதி மக்களுக்கும் கணிசமான வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுசென்று உரிய தீர்வைப் பெற்றுத் தருவேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X