2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விரதத்தால் வடமாகாண சபை ஒத்திவைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உறுப்பினர்களில் சிலர் ஆடிச் செவ்வாய் விரதம் இருந்தமையால், அவர்களுக்காக வடமாகாண சபையை தொடர்ந்து நடத்தாமல் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒத்திவைத்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே, இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்று அமைப்பது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்ட பிரேரணை, வடமாகாண சபையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், அந்தக் குழுவை அமைப்பதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பையும், பல உறுப்பினர்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.

தான் ஆடிச் செவ்வாய் விரதம் என்றும், இது தொடர்பான விவாதத்தை தொடர்ந்து நடத்தினால் மதியச் சாப்பாடு சாப்பிடமுடியாது என உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தவராசா நானும் ஆடிச்செவ்வாய் விரதம் என்றார். வேறு சில உறுப்பினர்களும் விரதம் என்று கூறினார்கள்.

அவையை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்து செலவுகளை கூட்டாமல், இன்றே இது தொடர்பில் விவாதியுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்தார்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த சயந்தன், 'அமைச்சர்களுக்கு எதிராக பிரேரணை கொண்டுவரமுடியாது. அமைச்சர்கள் என்பவர்கள் கூட்டுப்பொறுப்புடையவர்கள். அவர்களை பிறிதொரு நபர்கள் விசாரிக்கின்றமை அவர்களின் சிறப்புரிமையை மீறும் செயல் ஆகும். ஒரு அமைச்சர் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்காக அனைத்து அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்தப்படுகின்றது' என்றார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், செய்தாலும் கதைக்கின்றீர்கள் செய்யாவிட்டாலும் கதைக்கின்றீர்கள்' என்றார்.

சிவாஜிலிங்கம் கருத்துக்கூறுகையில், 'விசாரணை நடத்தாவிட்டால் கதைக்கின்றீர்கள். நியமித்தால் எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்கள். தற்போது முதலமைச்சரிடம் கொஞ்ச ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதனை வைத்து விசாரணை செய்ய விடுகின்றீர்கள் இல்லை. குழு அமைத்து குற்றவாளிகள் கண்டறியப்பட்டால், அடுத்த கட்டம் என்ன என்னும் தெரியவில்லை. நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமா? தற்போது, ஆதாரங்கள் ஆவண ரீதியாக உள்ளன. அவற்றை விசாரிக்க வேண்டிய கடப்பாடுகள் உள்ளன'  என்றார்.

இந்த விவாதத்தை மேற்கொண்டு செல்லாமலும், ஆடிவிரதத்தைக் கருத்திற்கொண்டும் பிரேரணை சபையில் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X