2025 ஜூலை 19, சனிக்கிழமை

வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி : முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்ப்பு

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, நாயாற்றில் மீன்பிடிப்பதற்கு வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி வழங்கியமைக்கு, முல்லைத்தீவு மீனவ சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ஏற்கெனவே,  வெளிமாவட்ட மீனவர்கள் 78பேருக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் முல்லைதீவு மீனவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வரும் நிலையில், கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளரால் மேலும் 25 மீனவர்களுக்கு அனுமதி வழங்கியதை, முல்லைத்தீவு மீனவ சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்றது.

இதன்போது, நாயாற்றில் மீன்பிடிப்பதற்காக, வெளிமாவட்ட மீனவர்கள் 25 பேருக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதை கடுமையாக எதிர்த்த முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ், கருத்து தெரிவிக்கையில்,

'நாயாற்றில் மீன்பிடிப்பதற்கு 78 வெளிமாவட்ட மீனவ படகுகளுக்கு 1983ஆம் ஆண்டு வழங்கிய அனுமதியை ரத்துச் செய்யுமாறு நாங்கள் கடந்த காலங்களில் கோரிக்கை முன்வைத்து வந்துள்ளோம். எமது கோரிக்கையும் மீறி 78 மீனவ படகுகளுக்கும் மேலதிகமாக சுமார் 320 படகுகள் வரையில் நாயாற்றில் மீன்பிடியில் ஈடுபட்டன.

இவர்களே சட்டவிரோத மீன்பிடி முறைகளை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இருக்க மேலும் 25 பேருக்கு அனுமதி வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

'எங்கள் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்கு, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர முல்லைத்தீவுக்கு வரவேண்டும்.

அப்போதுதான் வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி வழங்கியமை பிழையென்பது அவருக்கு புரியும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X