2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'அபிவிருத்தி தொடர்பில் எம்முடன் பேசுங்கள்'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வட மாகாண அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில், வட மாகாண சபையையும் உள்ளடக்கி கணிப்பைச் செய்ய வேண்டும். எம்முடன் கலந்துரையாடாது செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது, எம்மீது உங்கள் கருத்துக்களைத் திணிப்பதாக அமையும். இதனால்தான், எம்மக்களின் பிரதிநிதிகளையும் சேர்த்து ஆய்வைக் கொண்டு நடத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்' என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற வட மாகாண அபிவிருத்தித் தேவைகளின் கணிப்புப் பற்றிய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,  '2003இல் தேவைகள் தொடர்பில் கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. பின்னர் 2004இல் சுனாமியும் 2009இல் போரின் முடிவுக்கட்டமும், பல விதமான பாதிப்புக்களையும் அழிவுகளையும் கொண்டு வந்தன. எனவே, புதியதொரு கணிப்பு நடைபெறுவது அவசியமாகிறது.

இந்தக் கணிப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தையும் எமது வட மாகாண சபையையும் உள்ளடக்கி கணிப்பைச் செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன். எம்முடன் கலந்துரையாடாது இவ்வாறான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது, எம்மீது உங்கள் கருத்துக்களைத் திணிப்பதாக அமையும். இதனால்தான் எம் மக்களின் பிரதிநிதிகளையும் சேர்த்து இந்த ஆய்வை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறான கணிப்பு, தொடர்ந்திருக்கக் கூடிய அபிவிருத்தியை உறுதிப்படுத்த வேண்டும். பலவிதமான போரினால் உண்டாக்கப்பட்ட பௌதீக ரீதியான, மனோ ரீதியான பாதிப்புக்களை நீங்கள் கண்டறிய வேண்டும்.

இவற்றுக்கான அடிப்படைத் தரவுகள், சரியான முறையில் கண்டறியப்பட வேண்டும். முன்னர் தயாரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் தரவுகள் பிழையானவை.


உதாரணமாக, விதவைகளைத் தமது கணவன்மார்கள் போரினால் இறந்தார்கள் என்று சொல்ல வேண்டாம் என்று அலுவலர்கள் நிர்ப்பந்தித்ததால், விதவைகள் 7,000க்கு மேல் என்றும், இயற்கை மரணம் எய்தியோர் 29,000 என்றும் கூறப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் பொய் விவரங்களாக அமையக் கூடாது. மக்களின் அடிமட்டத்தில் இருந்து உண்மையான தரவுகள் பெறப்பட வேண்டும்.

பாரிய தொழிற்சாலைகள், பாரிய கட்டடங்கள் ஆகியன எமது நில அமைப்புக்கும், கலாசார பின்புலத்துக்கும் ஒவ்வாதன என்பதே எமது கணிப்பு. அவை பற்றி ஆராயுங்கள். கூட்டுறவு அடிப்படையில் தொழில் முயற்சிகளும்  கைத்தொழில்களும் நடப்பது உசிதம் என்றே நாம் நம்புகின்றோம்.

மேலும், எம் இளைய சமுதாயத்தின் திறன்களை அவதானிக்கும் போது, தகவல் தொடர்பு சம்பந்தமான தொழில்கள், காரியாலய பின்னணி வசதிகள் ஏற்படுத்தல், பொருளாதாரத் துறைசார்ந்த தொழில்கள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்தலை அவர்கள் வரவேற்பார்கள் என்று எண்ண இடமுண்டு.

தனியார் முதலீடுகளை நாம் வரவேற்கின்றோம். ஆனால், எம்மைப் பிடித்து விழுங்கும் நோக்குடன் எவரும் எம்மிடம் வருவதை நாம் வரவேற்க மாட்டோம். எம்மை, தெற்கின் எடுபிடிகளாக மாற்றப் பார்ப்பதை நாம் வரவேற்க மாட்டோம்.

எம்முடன் கலந்தாலோசித்து முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். எனது அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று கூறி வைக்கின்றேன்.


ஜெனீவா ஒன்றிணைந்த பிரேரணையின் ஏற்பாடுகளையும் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டுகின்றேன். போர்க்குற்ற விசாரணை முறையாக நடந்தேறினால் தான், சமூக நல்லிணக்கத்தை எங்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

அதிகாரப் பரவல், எமது மக்களுக்கு நன்மை பயப்பதாய் அமைய வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அரசாங்கம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற நடவடிக்கைகள் எடுத்தால் தான், அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X