2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்'

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலர் காரணம் தெரியாமலும் சிலர் குறிப்பிட்ட குற்றமெதுவும் புரியாமலும் நீண்டகாலமாக விசாரணையின்றி சிறைகூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் தங்களை வற்புறுத்தி வேண்டுகிறேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

அவர்களில் பலர் மிக்க கிரமமாக நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றார்கள். சாட்சிகள் சமூகமளிக்கவில்லை, அறிக்கைகள் ஏதும் வரவில்லை அல்லது இன்னமும் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்ற நியாயமற்ற காரணங்களை காட்டி விசாரணை எதுவுமின்றி, மீண்டும் சிறைச்சாலைகளுக்கு கொண்டுச்செல்லப்படுகிறார்கள்.

அவர்கள் அரசியல் கைதிகள் இல்லையென கூறுவது தவறாகும். அவர்கள் முழுக்க முழுக்க அரசியல் கைதிகளே என்பதில் சந்தேகமில்லை. அப்படி அரசியல் கைதிகள் இல்லையென்றால் அவர்கள் எதற்காக விசாரணை எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

நான் மிகவும் வெளிப்படையாக  எனது கருத்தை கூறுவதானால், இக் கைதிகள் வேண்டுமென்றே எமக்குத் தெரியாத, சிலவேளை அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்த காரணத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

எதிர்கட்சித்தலைவர் இது சம்பந்தமாக அவர்கள் அரசியல் காரணத்துக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தார். அது அப்படியாயின் ஜே.வி.பி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், மத ஸ்தாபனங்கள், இவர்களை நிபந்தனை எதுவுமின்றி விடுதலை செய்யுமாறு இறுதி யுத்தத்தின்போது தளபதியாக செயற்பட்ட இராணுவ அதிகாரி கோரும்போது இக் கைதிகளுக்கு என்ன அரசியல் காரணம் இருக்க முடியும்? என குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் மிக உச்ச பதவியை வகிக்கும் தாங்களே தங்களுக்கு தீங்கு விளைவிக்க முயன்றவரை மன்னித்து விடுதலை செய்துள்ளீர்கள். இச் செயல் தங்களின் பாரபட்சமான செயலென நான் கேட்கலாமா? நான் கூற முற்படுவது என்னவென்றால் ஏனைய கைதிகளின் உற்றார், உறவினர்கள் இப்படியொரு வாய்ப்பு தமது உறவுகளுக்கு அளிக்கவில்லை என்று பெரும் துன்பப்படுவார்கள் என்பதாலேயே. அவர்களுக்கு கிடைத்த ஒரேயொரு வாய்ப்பு மௌனமாக கண்ணீர் வடிப்பதே.

இவர்களில் ஒருவர் குறிப்பிட்டவொரு குற்றத்துக்காக, அது பாராதூரமான குற்றமாகவும்  இருக்கலாம். அதற்கு சிறைத்தண்டனை கிடைத்து அல்லது ஆயுள் தண்டனையாககூட இருக்கலாம். குறிப்பிட்ட இந்த காலத்துக்குள் தண்டனை நிறைவேறி சுதந்திரப் பறவையாக வெளியேறி இருக்க வேண்டியவர்களை இவ்வாறு நீண்டகாலம் தடுத்து வைத்திருப்பது எனக்கு நியாயமாக தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டது. நான் தங்களிடம் வேண்டுவதெல்லாம் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென்பதே. ஏனெனில் இந்திய-இலங்கை பேச்சுவார்த்தையின் போது தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மட்டுமல்ல, குற்றவாளிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள்கூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.

இதேபோன்றுதான் 1970ஆம் ஆண்டுகளில் குற்றவாளிகளாக காணப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) கூட விடுதலை செய்யப்பட்டார்கள்.

பின்வரும் சிபாரிசுகளை தனிப்பட்ட முறையில் அல்லாமல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தவறாக வழி நடாத்தப்பட்ட கூட்டத்தினராக கருதி, கூட்டாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

01.    தனிப்பட்ட ஒரு நபர் ஒருவரைப்பற்றி கவலைப்படவில்லை. எனது மனத்தாக்கம் அக்குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மக்கள் மீது மட்டுல்ல பெரும் வட்டத்துக்குள் அடங்கும் உற்றார் உறவினர், முதியோர், பெண்கள் பிள்ளைகள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
02.    தாமதமற்ற விசாரணை சாதாரணமான நாட்களில் கிடைக்க வேண்டியது தனி மனிதனொருவரின் அடிப்படை உரிமையாகும்.
03.    குடும்பத் தலைவனின் பங்கு குடும்ப நிர்வாகத்துக்கு கிடைக்காமல்விட்டால் அக் குடும்பம் எத்தகைய துன்பத்தை, மேலதிக சுமக்க வேண்டி ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
04.    குடும்பத் தலைவர்கள் தடுப்புக் காவலில் கைதிகளாக சிறைகளில் இருந்த வேளையில்  அவர்களுடைய குடும்பத்தினர், மனைவி மக்கள் தமது தலைவிதி நிர்ணயிக்கப்படப்போகும் இடமாகிய மாத்தளன் கிராமத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த வேளையில் கை, கால்களை இழந்தும் சிலர் கண் பார்வையை இழந்தும் இன்னும் சிலர் செல்தாக்குலில் தமது அன்பு உறவினர்களை இழந்தும் காணப்பட்டனர். சிலர் குண்டு சிதறல்களை தம் உடல்களில் இன்றும் சுமக்கின்றனர்.
05.    விடுதலைப் புலி போராளிகள் எவ்வாறு இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிலர் அப்பாவித்தனமான குழந்தைகள், சிலர் பலாத்காரமாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள், மேலும் சிலர் விடயத்தின் தார்ப்பரியம் புரியாமல் தாமாக இணைந்தவர்கள். ஆகவே விடுதலைப் புலிகளை போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட வேண்டுமென்ற சிலரின் முட்டாள்தனமான கோரிக்கையை நிராகரித்து எக்காரணம் கொண்டும் போர்க்குற்றங்களுக்காக அவர்கள் அவ்வாறு விசாரிக்கப்படக் கூடாது என்பதே எமது வேண்டுகோள்.
06.  திரும்பத் திரும்ப எம்மால் விடப்பட்ட கோரிக்கைகள் தங்களின் உள்ளத்தை தொடவில்லை என்றால் நான் தங்களிடம் வேண்டுவது அவர்கள் தமதுயிரைதன்னும் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்பதே. இன்றைய சூழ்நிலையில் இதுவே சிறந்த வழியாகுமென நினைக்க வேண்டியுள்ளது. இதுவொரு புதிய விடயமல்ல அவர்கள் தமது பெரும் துயரத்திலிருந்து விடுபட இதுவே சிறந்த வழியென நான் நம்புகிறேன்.
07.    எதிர்வரும் சில நாட்களுக்குள் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க இருப்பதாக அறிகிறேன். அவர்களின் இப்புதிய நடவடிக்கை 'ஓநாயும் இடையனும்' என்ற கதையில் வருகின்ற முடிவை ஒத்ததாக அமையக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.                        

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X